இலங்கையில் வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட

மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாது

இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய விளக்கம்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 31 23:15
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 22:35
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்ததேசப் பிரிய கொழும்பில் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென ஏற்கனவே இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியிருந்தது. இந்த நிலையில் மகிந்த தேசப்பிரிய தேர்தலை நடத்த முடியாதெனத் தற்போது கூறியுள்ளார். எல்லிபட்டி பிரதேச சபைத் தேர்தலை ஒக்ரோபர் மாதம் நடத்த வேண்டுமென இலங்கை உயர் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் இதனாலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாதெனவும் அவர் கூறுகின்றார்.
 
கடந்த ஆண்டு 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலின் போது எல்பிட்டிய பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான ஜனநாயகத் தேசிய முன்னணியின் வேட்பு மனு உதவித் தெரிவத்தாட்சி அதிகாரியினால் நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதற்கு எதிராக இலங்கை உயர் நீதீமன்றத்தில் ஜனநாயகத் தேசிய முன்னணி அப்போது மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை பரிசீலனை செய்த உயர் நீதிமன்றம், எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்த இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த மனுவை நேற்று வெள்ளிக்கிழமை பிரசன்ன ஜயவர்தன, விஜித் மலல்கொட,முர்து பெர்னாண்டோ ஆகிய நீதியரசர்கள் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை ஒக்ரோபர் முதல் வாரத்தில் நடத்த வேண்டுமென உத்தரவிட்டிருந்தனர்.

இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை அனுப்பியுள்ளதாகவும் இதனால் தேர்தல் ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமெனவும் மகிந்த தேசப்பிரிய கூறினார்.

இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த வேண்டியுள்ளதால்,ஒன்பது மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாண சபைகளுக்கான எல்லை மீள் நிர்ணய நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப்படவுமில்லை. அத்துடன் விகிதாசார முறையிலா அல்லது விகிதாசாரமும் தொகுதிவாரியும் இணைந்த கலப்புத் தேர்தல் முறையிலா மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதெனவும் இதுவரை முடிவு செய்யப்படவுமில்லை.

இதனால் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாதென சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு தொிவித்துள்ளது.