வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது- உயர் நீதிமன்றம் அறிவிப்பு

எல்லை மீள் நிர்ணய சபையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அறிவுறுத்தல்
பதிப்பு: 2019 செப். 02 20:51
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: செப். 05 10:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வடக்குக்- கிழக்கு உள்ளிட்ட மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்தார். குறிப்பாக மாகாணங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமா என்று இலங்கை உயர் நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன சட்ட வியாக்கியானம் கோரி விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால் மாகாணங்களுக்கான எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் ஜனாதிபதியால் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் அறிவிப்பை வெளியிட முடியாதென உயர் நீதிமன்றம் அதிகாரபூர்மாக அறிவித்துள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் உதய ஆர் செனவிரட்ன இது தொடர்பாக அறிக்கை ஒன்றை இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்.
 
கடந்த மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் குறித்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள், கடந்த 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முடிவை அறிவிப்பதாகக் கூறியிருந்தனர்.

ஆனால் ஐந்துபேர் கொண்ட நீதியரசர்கள் குழு தமது முடிவை ஏகமானதாக 29- 08- 2019 அன்று திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளதாக செயலாளர் உதய ஆர்; செனவிரட்ன இன்று திங்கட்கிழமை கொழும்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

அமுலில் உள்ள புதிய முறையிலான மாகாண சபைகள் திருத்தச் சட்டத்தின் பிரகாரமோ அல்லது முன்னர் அமுலில் இருந்த சட்டத்தின் படியோ மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியாது என உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென்றும் இல்லையேல் இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்து அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த முடியுமெனவும் இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே கூறியிருந்தார்.

அத்துடன் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை ஒக்ரோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த வேண்டுமென கடந்த வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததால் மாகாண சபைத் தேர்தல்களை இந்த ஆண்டு நடத்த முடியாதென்றும் மகிந்த தேசப்பிரிய கூறியிருந்தார்.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போடுவதே மைத்திரிபால சிறிசேனவின் திட்டமாக இருந்ததாக மகிந்த ராஜபக்சவை தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி உறுப்பினர் மகிந்தானந்த அழுத்தகமகே குற்றம் சுமத்தியிருந்தார்.

எல்லை மீள் நிர்ணயத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐவர் கொண்ட எல்லை நிர்ணயக் குழுவொன்று, 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டது. அந்தக் குழு தயாரித்த அறிக்கை, மாகாண சபை, உள்ளூராட்சி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் இதுவரை அதற்கான அங்கீகாரம் நாடாளுமன்றத்தினால் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த வருடம் ஓகஸ்ட் 28ஆம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அக்குழு மேற்கொண்டிருந்த எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை தொடர்பான திருத்தங்கள் அறிக்கையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த அறிக்கை முழுமையாகச் சமா்ப்பிக்கபடவில்லை.

இந்த நிலையிலேயே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமா இல்லையா என்பது குறித்து உயர் நீதிமன்றத்திடம் மைத்திரிபால சிறிசேன சட்ட வியாக்கியானம் கோரியிருந்தாா்.