வடமாகாணம் மன்னார்

முள்ளிக்குளம் காணிகள் கையளிக்கப்படவில்லை- பிரஜைகள் குழு

உறுதிமொழிகள் கைவிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 செப். 04 10:26
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: செப். 12 23:51
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வட மாகாணம் மன்னார் மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் இருப்பிடங்கள், அவர்களின் காணிகளிலிருந்து படையினர் வெளியேறுவது தொடர்பாக இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்று மன்னார் பிரஜைகள் குழு அதிருப்பதி வெளியிட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளதாக பிரஜைகள் குழு கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது.
 
2016ம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்தை ஆக்கிரமித்திருந்த கடற்படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

சுமார் ஒரு மாதத்திற்கும் அதிகமாக நீடித்த உண்ணாவிரத போராட்டதில் அவ்வப்போது அரசியல் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.

போராட்டம் உச்ச நிலையை எய்தியிருந்த நிலையில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் முள்ளிக்குளம் மக்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை அடுத்து முள்ளிக்குளம் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை கைவிட்டிருந்தனர்.

எனினும் முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று வரை இலங்கைக் கடற்படையினரால் மீள அளிக்கப்படவில்லை. மேலும் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது மக்களின் வீடுகளிலிருந்து கடற்படையினரை வெளியேறுமாறு கோரி பாதிக்கப்பட்ட பொது மக்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் இலங்கை கடற்படையினருக்கு எதிராக வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

சுமார் இரண்டு வருடங்கள் சென்ற நிலையிலும் குறித்த வழக்கு விசாரனைகள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் தொடர்ந்தும் நடைபெறுவதாக பாதிக்கப்பட்ட பள்ளிமுனை பொது மக்கள் கூறுகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை, முள்ளிக்குளம், வெள்ளாங்குளம், திருக்கேதீஸ்வரம், பள்ளிமுனை, பேசாலை ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் அவர்களின் இருப்பிடங்களிலும் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டங்களிலும், பண்ணைகளிலும் இலங்கை கடற்படையினரும், இராணுவத்தினரும் பல வருடங்களாக நிலை கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் 2018ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின்போது தேர்தல் பிரச்சாரங்களுக்காக மன்னாருக்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதி மைத்தரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரிசாட் பதியூதின், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவம் மற்றும் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிப்பதாக உறுதியளித்திருந்தனர்.

எனினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதாக பிரஜைகள் குழு கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளது.