வடக்குக்- கிழக்கில் இலங்கைப் படையினரால்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மாதம் ஆறாயிரம்

நீதிக்குப் பதிலாக ரணில் அரசாங்கம் நிவாரணம் வழங்க முடிவு- உறவினர்கள் பலர் ஏற்க மறுப்பு
பதிப்பு: 2019 செப். 04 16:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 09 22:38
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#OMPSL
#Tamil
#LKA
#SriLanka
போரின்போதும் அதன் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மூலமாக பதவி செய்து ஏற்கனவே இல்லாமைச் சான்றிதழ் (Certificate of absence) பெற்ற உறவினர்களுக்கே முதலில் மாதம் ஆறாயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மாதம் ஆறாயிரம் ரூபா போதுமானதல்ல என்று பொது அமைப்புகளும் மனித உரிமைச் சட்டத்தரணிகளும் கூறியதுடன் இடைக்கால நிவாரணமாக ஆறாயிரம் ரூபா வழங்கப்படுவதற்கு எதிர்ப்பும் வெளியிட்டிருந்தனர்.
 
இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் பத்தாம் திகதி முதல் ஒவ்வொரு மாதமும் பத்தாம் திகதி பாதிக்கப்பட்டு பதிவு செய்துள்ள உறவினர்களின் வங்கிக் கணக்கிற்கு ஆறாயிரம் ரூபா வைப்பிலிடப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் ஏற்கனவே பதிவு செய்த உறவினர்கள் இந்தத் தொகை போதுமானதல்ல என்றும் இதனை ஏற்க முடியாதென்றும் ஆரம்பம் முதல் கூறி வருகின்றனர். அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பான நீதி கிடைக்கும் வரை எந்தவொரு நிவாரணங்களையும் பெறமுடியாதென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் ஏற்கனவே கூறியிருந்தது.

வவுனியாவில் தொளாயிரம் நாட்களையும் கடந்து தொடர் போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள் இல்லாமைச் சான்றிதழ் பெறுவதற்கான பதிவுகளை புறக்கணித்திருந்தனர். இலங்கை ஒற்றையாட்சி அரசின் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தில் நம்பிக்கை இல்லையெனவும் கூறி வருகின்றனர்.

குறிப்பிட்ட சில உறவினர்கள் மாத்திரமே அந்த அலுவலகத்தில் பதிவு செய்து இல்லாமல் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அவர்களும் மாதம் ஆறாயிரம் ரூபா வழங்கப்படுவதை ஏற்க மறுத்திருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சரவை ஆறாயிரம் ரூபா வழங்குவதென முடிவு செய்துள்ளது. மாதம் ஆறாயிரம் ரூபா போதுமானதல்ல என்று தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.