இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி தேர்தலில் போட்டியிடும்

செயலாளர் தயாசிறி ஜயசேகர, சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்தார்
பதிப்பு: 2019 செப். 05 22:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 06 22:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#maithripalasirisena
#PresPollSL
#LKA
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடுமென கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார். இந்தத் தகவலை கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்கா கொழும்பில் இன்றிரவு ஊடகங்களிடம் வெளியிட்டார். கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான அறிவித்தல் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர் மகிந்த ராஜபக்ச தலைமையில் பிரிந்து சென்று ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுன கட்சியை உருவாக்கி ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கடந்த ஓகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் வேட்பாளராக யாரை நிறுத்துவது என இதுவரை பெயர் குறிப்பிடப்படவில்லை.

மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்த பின்னர் வேட்பாளரின் பெயர் வெளியிடப்படுமெனக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நிலவுவதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்து எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.

ஐக்கிய தேசியக் கட்சியில் சஜித் பிரேமதாசவுக்குச் சார்பான உறுப்பினர்கள் பலர் மைத்திரிபால சிறிசேனவோடு உரையாடியுமிருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துமென வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.