இலங்கைத் தலைநகர் கொழும்பில்

மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கொலை- ஜனாதிபதி சட்டத்தரணியிடம் விசாரணை

முன்னாள் கடற்படைத் தளபதியே பிரதான எதிரி
பதிப்பு: 2019 செப். 13 23:37
புதுப்பிப்பு: செப். 14 03:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் உள்ள தெஹிவளை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்களைக் கடத்தி சென்று கப்பம் பெற்றுக் கொண்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் ஐந்து மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கடத்தல் கொலைச் சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொடவை விசாரணை நடத்தி வரும் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரே இன்று வெள்ளிக்கிழமை சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் விசாரணை நடத்தினர்.
 
மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த எழுத்து மூலமான உண்மைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியிலேயே சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை குறித்த விசாரணை அறைக்கு இன்று அழைக்கப்பட்ட சவேந்ர பெர்ணான்டோவிடம் ஐந்து மணித்தியாலம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட, குற்றப்புலனாய்வுப் பொலிஸாரிடம் விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே கொழும்பு கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவின் விசேட உத்தரவுக்கு அமைவாக சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் தெரிவித்தனர்.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட பிரதான எதிரியாகவுள்ள நிலையில் அவரைப் பாதுகாக்கவே இலங்கை அரசாங்கம் முற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அமெரிக்காவின் பூகோள அரசியல் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஈழப் போர் நடைபெற்ற காலத்தில் இலங்கைப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் குறித்த விவகாரங்களில் குறிப்பிட்ட சில சம்பவங்களை மாத்திரம் விசாரித்து ஒருசில இராணுவ அதிகாரிகளுக்குத் தண்டனை கொடுத்துத் திசைதிருப்புகின்ற முயற்சியாகவும் இந்த விசாரணைகள் நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.

அல்லது அனைத்து இனப்படுகொலைகள் பற்றிய விசாரணைகளையும் மனித உரிமை மீறல் விவகாரங்களாக மாற்றி இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புக்குள் நின்று கொண்டு விசாரணை நடத்துகின்ற பொறி முறைகளை உருவாக்கலாம் என்ற அடிப்படையிலும் இவ்வாறான வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.