இலங்கை ஒற்றையாட்சி அரசினால் யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ள

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தை மூடுமாறு கோரிப் போராட்டம்

நீதி மாத்திரமே தேவையென்றும் வலியுறுத்தல்
பதிப்பு: 2019 செப். 15 21:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 16 01:02
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#OMPSL
#Tamil
#LKA
#SriLanka
#genocide
இலங்கை ஒற்றையாட்சி அரசு கொழும்பை மையமாகக் கொண்டு உருவாக்கிய காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் (Office on Missing Persons) (OMP) யாழ்ப்பாணக் கிளையை மூடிவிடுமாறு வலியுறுத்தி இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக முதலில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
 
பின்னர் அங்கிருந்து உறவினர்கள், காணாமற்போனோர் அலுவலகத்தின் யாழ் பிராந்திய அலுவலகத்திற்குப் பேரணியாகச் சென்று எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளியிட்டனர். நீதி மாத்திரமே தேவையென்றும் நிவாரணங்கள் அவசியமில்லையெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தி வரும் இந்த அலுவலகத்தில் நம்பிக்கையில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த அலுவலகம் திறக்கப்பட்டபோது தம்முடன் கலந்தாலோசிக்கப்படவில்லை எனவும் ஏற்கனவே கொழும்பில் திறக்கப்பட்ட இந்த அலுவலகத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்ததாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியிருந்தனர்.

இதேவேளை, நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் கிளிநொச்சியில் நேற்றுச் சனிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறவினர்கள் சங்கத்தின் வடக்குக் கிழக்கு இணைப்பாளர் யோகராச கனகரஞ்சனி தெரிவித்திருந்தார்.