வடமாகாணம் யாழ்ப்பாணம்

இணுவில் பகுதியில் கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாய் கைது

கணவன், மனைவி, பிள்ளைகள் மீதும் தாக்குதல்- வைத்தியசாலையில் அனுமதி
பதிப்பு: 2019 செப். 16 11:07
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 17 06:43
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#srilankan
#military
தமிழர் தாயகம் வடமாகாணத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டிருப்பதாகத் தமிழ்ப் பிரநிதிநிதிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர். ஆனாலும் குற்றச் செயல்கள் குறையவில்லை. அத்தோடு அங்கு இடம்பெறுகின்ற குற்றச் செயல்கள், வன்முறைகளின் பின்னணியில் இலங்கை இராணுவம் இருப்பதாக இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில், யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி கொள்ளையிட்ட சந்தேகத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்தக் கொள்ளைச் சம்வம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.30க்கு இடம்பெற்றுள்ளது. முகத்தை முழுமையாக மூடிக் கொண்டு கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த ஐந்துபேர், அங்கிருந்த குடும்பஸ்த்தரையும் அவரது மனைவி பிள்ளைகளையும் தாக்கி அச்சுறுத்தினர்.

அதன் பின்னர் வீட்டிலிருந்த பெறுமதிவாய்ந்த மடிக்கணினி கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றைக் கொள்ளையடித்தனர் பெண்களை அச்சுறுத்தி காதில் அணிந்திருந்த தோடுகளையும் அபகரித்துள்ளனர்.

கொள்ளையர்களின் தாக்குதலினால் வீட்டில் இருந்த அனைவரும் படுகாயமடைந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். கொள்ளையர்கள் வீட்டில் இருந்து வெளியேறியதும் அயலவர்களின் உதவியோடு வீட்டார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சுன்னாகம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

கொள்ளை இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார் அங்கு விசாரணை நடத்தினர். காயமடைந்த வீட்டாரிடம் வைத்தியசாலையில் வைத்து வாக்கு மூலங்களைப் பெற்றனர். பின்னர் சந்தேகத்தின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரைப் பொலிஸார் புன்னாலைக் கட்டுவன் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்தனர்.

கொள்ளையில் ஈடுபட்ட ஏனைய நபர்களும் இலங்கை இராணுவத்தில் பணியாற்றுகின்றனரா அல்லது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வரும் பொலிஸார் விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினர்.

கைது செய்யப்பட்ட இரணுவத்தைச் சேர்ந்த நபரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட மடிக் கணணியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கும் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளிலும் இலங்கை பொலிஸார், இலங்கை இராணுவம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தங்களுடன் ஒத்துழைக்காமல் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர் மீதே இலங்கை விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.