ஈழத் தமிழர் தாயகத்தில் சிங்கள மயமாக்கலை நிறுத்து-

சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ்

யாழ் கோட்டை முற்றவெளித் திடலில் ஒன்று கூடிய மக்கள்- நகரில் வர்த்தக நிலையங்கள் பூட்டு
பதிப்பு: 2019 செப். 16 15:11
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 20 22:37
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#humanrights
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது. வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஈபிஆர்எல்எப் இயக்கத்தின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வைத்தியக் கலாநிதி லக்ஸ்மன் ஆகியோரின் இணைத் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை நடத்திய மூன்றாவது எழுக தமிழ் நிகழ்வில், சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்தும் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகி யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளித் திடலை நண்பகல் 12.30 அளவில் சென்றடைந்தது.
 
பின்னர் அங்கு இடம்பெற்ற கூட்டத்தில் விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச் சந்திரன் லக்ஸ்மன் ஆகியோர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ் ஆயர் இல்ல குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரெட்னம், யாழ் சிம்மயா மிசன் குருமுதல்வர் சிகானந்த சுவாமிகள் ஆகியோர் ஒன்று கூடியிருந்த மக்கள் முன்னிலையில் ஆசியுரை வழங்கினர்.

Eliuka Tamil
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். காணாமல் போன தங்கள் உறவுகள் தொடர்பாக சர்வதேசம் பொறுப்புக் கூற வேண்டு என்று கோசம் எழுப்பினர். தங்கள் பிள்ளைகள், கணவன்மாரின் படங்களைத் தாங்கியவாறு எழுக தமிழ்ப் பேரணியில் அவர்கள் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம் இது. இலங்கை அரசாங்கம் அமைத்துள்ள காணாமல் போவோரைக் கண்டறியும் அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லையென்றும் கோசம் எழுப்பியவாறு அவர்கள் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்டனர்
தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, இறுதிப் போரின்போது போர்க் குற்றவாளிகளை கொன்ற இலங்கை அரசாங்கம், இலங்கைப் படை அதிகாரிகள் ஆகியோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்து, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற சர்வதேச விசாரணையை நடத்து, சிங்கள மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

வவுனியா, மன்னார் ஆகிய பிரதேசங்களில் இருந்து விசேட பேருந்துகளில் யாழ்ப்பாணத்திற்கு வந்த மக்கள் யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளித் திடலில் ஒன்று கூடியிருந்தனர்.

தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கு உரிய முறையிலான பேச்சுக்கள் எதனையும் இலங்கை அரசாங்கம் குறிப்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் நடத்தவில்லை என்றும் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் எழுக தமிழ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கோசம் எழுப்பினர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தும் பதாதைகள், சுலோகங்களையும் மக்கள் கைகளில் ஏந்தியிருந்தனர். தமிழ் மக்களின் பாரம்பரியக் காணிகள் இலங்கை இராணுவத்தால் திட்டமிடப்பட்டு அபகரிக்கப்படுவதாகவும் விகாரைகள் கட்டப்படுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தினர்.

இலங்கை இராணுவத்தினரும் இலங்கைப் பொலிஸாரும் முக்கிய சந்திகளில் குவிக்கப்பட்டிருந்தபோதும் அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லையென ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பாடசாலைகள் இயங்கிய போதும் மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்ததாக அதிபர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, தமிழ் மக்கள் பேரவையில் முன்னர் இணைத் தலைமை பதவி வகித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்த எழுக தமிழ் நிகழ்வில் பங்குபற்றவில்லை.

ஈழத் தமிழர் தேசத்தின் அங்கீகாரம், ஈழத் தமிழர் இறைமை பற்றிய கோட்பாடுகளை முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கைவிட்டுள்ளதாகவும் இலங்கை அரசின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை தமிழ் மக்கள் பேரவை ஏற்றுள்ளதா என்ற கேள்விகளையும் குற்றச்சாட்டுக்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.