வடக்குக்- கிழக்குத் தாயகத்தில்

இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் 2009 வரை இனப்படுகொலை நடந்தது- விக்னேஸ்வரன்

சர்வதேசத்துக்கு எடுத்துக் கூறவே எழுக தமிழ் நிகழ்வு என்றும் விளக்கம் கூறினார்
பதிப்பு: 2019 செப். 16 23:18
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: செப். 17 06:52
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#Vigneswaran
இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் தமிழ் இனப்படுகொலை நடந்துள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றும்போது கூறியுள்ளார். யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வில் உரையாற்றிய அவர் இனப்படுகொலை என்பது கலாச்சாரம், பண்பாடு, காணிகளை அபகரித்தல் பேன்றவற்றையும் உள்ளடக்கியதென்றும் கூறினார். ஈழத் தமிழர்களின் அவலங்களையும் அழிவுகளையும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேசத்துக்கும் எடுத்துக் கூறவே இந்த எழுக தமிழ் நடத்தப்படுகின்றது.
 
இலங்கையின் வரலாற்றுக் காலத்திற்கு முன்னரே தமிழ் மக்கள் தம்மைத் தாமே ஆளும் நிலை காலத்துவ ஆட்சி ஆரம்பிக்கும் வரை நீடித்திருந்தது. ஆனால் பிரித்தானியரிடம் இருந்து இலங்கை சுதந்திரமடைந்தபோது ஒற்றையாட்சி அரசின் நிர்வாகத்தின் கீழ் தமிழர்களின் ஆட்சி அதிகாரங்கள் பறிபோனது என்றும் அவர் கூறினார்.

ஓவ்வொரு காலகட்டத்திலும் பதவிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்கள் வடக்குக் கிழக்குத் தாயகத்தை ஆக்கிரமித்து சட்டங்களை உருவாக்கியும் சட்டங்களுக்கு புறம்பாகவும் இன அழிப்பு நடவடிக்கைளில் ஈடுபட்டார்கள்.

இவற்றுக்கு எதிராக தமிழ் மக்களினால் முப்பது ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் அதற்கு அடுத்த முப்பது ஆண்டுகள் ஆயுதப் போராட்டமும் நடத்தப்பட்டது.

எழுக தமிழ் 2019
வடமாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற எழுக தமிழ் நிகழ்வுக்கான மக்கள் பேரணியில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம் இது. தமிழ் இனப் படுகொலை, சர்வதேச நீதி விசாரணை ஆகியவற்றை வலியுறுத்திய விக்னேஸ்வரன், இனப்படுகொலை என்றால் என்ன என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் வரைபு ஒன்றில் இலங்கை 1950 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இன அழிப்புப் பற்றி ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பதாம் திகதி வரையறை செய்துள்ளது. அதனை இலங்கை 1950 ஆண்டு ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒரு மக்கள் கூட்டத்தை கொல்லுதல், உடல் உள ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தல், வேண்டுமென்றே ஒரு இனத்தின் பிரதேசத்தில் முழுமையாகவோ பகுதியளவிலோ பௌதீக அளவில் அழிவுகளை ஏற்படுத்தல். ஒரு மக்கள் கூட்டத்தில் பிள்ளைகள் பிறக்காது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடல் இனப்பெருக்க ஆற்றலை நீக்குதல, ஒரு மக்கள் கூட்டத்தின் குழந்தைகளை மற்றைய இனத்திற்கு மாற்றுதல் இந்த வரையறைகளில் ஒன்று. இவையே இன அழிப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையின் வரைபில் கூறப்பட்டுள்ளது.

ஆகவே இன அழிப்பு என்பது வெறுமனே கொல்லுதல் என்பதை மாத்திரம் குறிப்பதல்ல. ஐ.நாவின் இந்த வரைவில் கூறப்பட்டுள்ள அத்தனை விடயங்களும் இன அழிப்புத்தான் என்று கூறிய விக்னேஸ்வரன், வடக்குக் கிழக்கில் 1948 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிகளில் வடக்குக் கிழக்கில் இன அழிப்பு நடத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இளைஞர். யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கான பெண்கள் இலங்கை இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன, தமிழ் மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன. பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்தும் உள்ளதாக அவர் கூறினார்.

அரசியல் தீர்வுக்காக வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் சபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தாயகப்பகுதியில் பயங்கரவாதம் இல்லை. ஆனால் அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே இங்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன அழிப்புத் தொடர்பாகவும் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது பற்றியும் விக்னேஸ்வரன் நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார்.