2008/2009 ஆம் ஆண்டுகளில்

கொழும்பில் பதினொரு தமிழர் கடத்தல்- விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

மைத்திரியால் இந்த மாதம் தரமுயர்த்தப்பட்ட வசந்த கரன்னாகொட விசாரணைக்கு உட்படுகிறார்
பதிப்பு: 2019 செப். 25 21:56
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: செப். 26 13:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#SLN
#wasanthakarannagoda
இலங்கைத் தீவின் தலைநகர் கொழும்பில் கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட பதினொரு தமிழர்கள் தொடர்பான வழக்கில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் விசாரணை நடத்துமாறு கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸார் நாளை வியாழக்கிழமையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையும் விசாரணை நடத்தவுள்ளனர். ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் 2008 ஆம் ஆண்டு கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட படை அதிகாரிகள் பன்னிரண்டுபேரிடம் விசாரணைகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.
 
இந்த நிலையிலேயே சென்ற பத்தொன்பதாம் திகதி அட்மிரல் வசந்த கரன்னாகொட அட்மிரல் ஓப் த ப்லீட் (Admiral of the fleet) என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தரமுயர்த்தப்பட்டார்.

கரன்னாகொட
இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட 2008/2009 ஆண்டுக் காலப் பகுதியில் கொழும்பில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட பதினொரு தமிழர்களைக் கடத்திக் கப்பம் பெற்றுப் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிரதான குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இதனால் இலங்கை உயர் நீதிமன்றத்திலும் கொழும்புக் கோட்டை நீதவான் நீதிமன்றத்திலும் கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். இந்த நிலையில், இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வசந்த கரன்னகொடவை இலங்கைப் படைத்துறை சேவையில் அட்மிரல் ஓப் த ப்லீட் (Admiral of the fleet) எனத் தரமுயர்த்தியுள்ளார். அவ்வாறு தரமுயர்த்தப்பட்டமைக்கான சான்றிதழை வசந்த கரன்னகொடவுக்கு மைத்திரிபால சிறிசேன இந்த மாதம் 19 ஆம் திகதி வழங்கிவைத்தார். இந்தப் பதவி நிலைத் தரமுயர்த்தல் தொடர்பாக இலங்கை அரச வர்த்தமானி இதழும் வெளியாகியிருந்தது.
பதினொரு தமிழர்கள் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்திருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்காவுக்கு 2009 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கிடைத்த உண்மைத் தகவல்கள் மறைக்கப்பட்டதன் பின்னணியில் வசந்த கரன்னாகொட இருப்பதாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியிருந்தனர்.

இதன் பின்னணியிலேயே விசாரணை நடத்துமாறு கொழும்புக் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளின் விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கூறியிருந்தனர்.

குறிப்பாகக் கடத்திக் கப்பம் பெறப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக கரன்னகொடவுக்கு தெரிந்திருந்ததாகவும் அது தொடர்பான ஆதரங்களை மறைத்துள்ளதாகவும் இலங்கைச் சட்டமா அதிபர் மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சட்டத்தரணி சனத் விஜயவர்த்தனவினால் அட்மிரல் வசந்த கரன்னாகொட சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகி வருகின்றார்.