வடக்குக் கிழக்குத் தாயகத்தில்

பௌத்த மயமாக்கலுக்கு 167 இடங்கள் தெரிவு- விபரிக்கிறார் நவநீதன்

எதிர்ப்பதற்கு மக்கள் தயாராகியுள்ள நிலையில் அரசியல் பிரதிநிதிகள் அசமந்தம் எனவும் குற்றம் சுமத்துகிறார்
பதிப்பு: 2019 செப். 30 10:47
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 21:21
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#buddhist
வடக்குக் கிழக்கில் பௌத்த சமயத்தைப் பரப்பும் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதாக தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான விஜயகுமார் நவநீதன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். இலங்கைத் தீவு முழுவதும் முந்நூற்றி 20 இடங்கள் பௌத்த சமயத்துக்குரியதாக இலங்கை ஒற்றையாட்சி அரசின் தொல்பொருள் ஆராச்சித் திணைக்களம் அடையாளப்படுத்தியுள்ளது. அவற்றில் நூற்றி 67 இடங்கள் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் உள்ளதாகவும் அவர் கூறினார். நூற்றி 67 இடங்களும் பௌத்த சமயத்துடன் தொடர்புடைய தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு வெறுமனே கொழும்பை மையமாகக் கொண்ட இலங்கை அரசாங்கத்தால் வெளியிடப்பட்டவை.
 
மாறாக முழுமையான ஆய்வுகள். பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், நிபுணர்கள் எவருடைய ஆலோசனைகள், கலந்துரையாடல்கள் எதுவுமேயின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மக்களை ஒன்று திரட்டி நீதியான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி சர்வதேச சமூகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் சக்தி மக்களுடைய அணி திரட்டல் என்பது நிச்சயம் உலகத்தின் மனட்சாட்சியைத் திறக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நவநீதன் கூறுகிறார்

இந்த அறிவிப்போடு அடையாளமிடப்பட்ட அந்த இடங்களிலே பௌத்த சிலைகளை வைத்தல். விகாரை கட்டுதல் பௌத்த சின்னங்களைப் பொறித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

அத்துடன் இலங்கை இராணுவ முகாம்களில் இருக்கும் இராணுவத்தின் வழிபாடுகளுக்காக அல்லது திட்டமிடப்பட்டு புத்தர் சிலைகள் இராணுவ முகாம்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இராணுவத்தினர் அந்த முகாம்களில் இருந்து வெளியேறி முகாம் மூடப்படும் போது அந்த இடத்தில் இருந்த புத்தர் சிலைகள் அப்படியே விகாரைகளாக வெளிப்படுகின்றன. ஆகவே திட்டமிடப்பட்ட முறையில் வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருவதாக நவநீதன் கூறுகின்றார்.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியடியில் நோயால் உயிரிழந்த சர்ச்சைக்குரிய மேதாலங்கார கீர்த்தி தேரரின் உடலைத் தகனம் செய்தமை தொடர்பாகவும் நவநீதன் விளக்கமளித்தார்.

வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் பௌத்த மயமாக்கல் என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆசீர்வாதத்துடன் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்போடு இடம்பெற்று வருவதாகக் குற்றச்சாட்டுக்கள் பகிரங்கமாக எழுந்துள்ள நிலையிலேயே அவர் கூர்மைச் செய்தித் தளத்திற்கு இந்த நேர்காணலை வழங்கியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கின்ற அல்லது தமிழ்ப் பிரதிநிதிகள் என்று கூறுகின்றவர்கள் கூட இந்த விடயத்திலே போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனையான அனுபவம் என்று நவனீதன் விபரித்தார்.

எனவே இவ்வாறு கவனம் செலுத்தாமல் இருக்கின்றமை தமிழ்ப் பிரதிநிதிகளுடைய கையாலாகாத்தனம் என்றே சிவில் அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. சமீபகாலமாக வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு, பௌத்தமயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராடி வருகின்றனர்.

தமிழர் மரபுரிமைப் பேரவை என்ற அமைப்பு இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கலுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிக் காத்திரமான பங்களிப்பை தமிழர் மரபுரிமைப் பேரவை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஈழத் தமிழ் மக்களின் இருப்பை அழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியது சிவில் சமூகத்தின் பிரதான கடமை. மக்கள் அநீதிகளுக்கு எதிராகப் போராடத் தயாராகி வருகின்றனர்.

எனவே மக்களை ஒன்று திரட்டி நீதியான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி சர்வதேச சமூகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும். மக்கள் சக்தி மக்களுடைய அணி திரட்டல் என்பது நிச்சயம் உலகத்தின் மனட்சாட்சியைத் திறக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நவநீதன் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயரதிகாரியான விஜயகுமார் நவநீதன், தற்போது முல்லைத்தீவில் வாழ்கிறார். தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத் தலைவராகச் செயற்படுகிறார். அத்துடன் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.