இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு

கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டைப் பயன்பாட்டை நிறுத்தத் தற்காலிகத் தடை விதிக்குமாறு கோரல்
பதிப்பு: 2019 செப். 30 18:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 20:45
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
கோட்டாபய ராஜபக்ச இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவரென அறிவிக்குமாறு கோரி கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமை உள்ளவரென்றும் ஆகவே இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாதென்றும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சிவில் சமூக செயற்பாட்டாளர்களான காமினி வியாங்கொட, சந்திரகுப்த தேனுவர ஆகியோரால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்துள்ளதாகப் பொய்யான தகவலைக் கூறி இலங்கைக் குடியுரிமைச் சான்றிதழை சமர்ப்பிக்காமல் இலங்கைக் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றவற்றை கோட்டாபய ராஜபக்ச பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதே கோட்டாபய ராஜபக்ச அம்பாந்தோட்டையில் உள்ள மெதமுன தேர்தல் தொகுதியில் தனது பெயரை வாக்காளர் பதிவில் சட்டத்திற்கு முரணாகச் சேர்த்திருந்தாரென்றும் எனவே கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டைப் பயன்பாட்டை இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்து தடுத்து நிறுத்துமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்கப் பிரஜாவுரிமையோடு தனது சகோதரரான மகிந்த ராஜபக்சவு்க்காக தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் கோட்டாபய ராஜபக்ச ஈடுபட்டதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இலங்கைக் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், இலங்கை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், இலங்கை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் அந்த அமைச்சின் செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பதில் பொலிஸ் மா அதிபர், இலங்கைக் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முற்படுவதாக ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீாிஸ் கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சுமத்தியுள்ளார்.