இலங்கை ஒ்ற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா?

கோட்டாபய மீதான விசாரணை நாளை ஆரம்பம்- வெள்ளியன்று தீர்ப்பு

கடவுச் சீட்டு, அடை­யாள அட்டை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவு
பதிப்பு: 2019 ஒக். 01 10:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 01 22:20
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொது ஜனப் பெர­மு­னவின் ஜனாதி­பதி வேட்­பா­ளர் கோட்டாபய ராஜ­பக்ச இலங்கை பிர­ஜை­ இல்லையென்பதையும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட முடியாதெனவும் அறிவிக்குமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை கொழும்பு மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் நாளை புதன்கிழமையும் நாளை மறு நாள் வியாழக்கிழமையும் இடம்பெறவுள்ளது. வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. செட்­டி­யோ­ராரி (Certiorari writ) எனப்படும் எழுத்­தாணை ­ஒன்று நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூகச் செயற்பாட்டாளர் சட்டத்தரணி காமினி வெயங்­கொட, பேரா­சிரியர் சந்­ர­குப்த தேனு­வர ஆகியோர் மனுவைத் தாக்கல் செய்­திருந்தனர்.
 
இந்த மனு மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் நாளை பரிசீலணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. மேன் முறை­யீட்டு நீதி­மன்றப் பிரதான நீதி­யரசர் யசந்த கோதா­கொட தலை­மையில் நீதி­பதி அர்ஜுன் ஒபே­ச­கர ஆகியோர் அடங்­கிய நீதி­ப­திகள் குழு முன்னிலையில் இந்த ­மனு நேற்றுத் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனு பரி­சீ­லனை செய்­யப்­பட்ட போது, பிர­தி­வா­தி­களில் இலங்கை ஒற்றையாட்சி அரசின் குடிவரவுக் குடி­­யகல்வுத் திணைக்­க­ளக் கட்­டுப்­பாட்­டாளர் ஆர்.எம்.ரத்­நா­யக்க, ஆட்­ப­திவுத் திணைக்­க­ள ஆணை­யாளர் வியானி குண­தி­லக, அரச நிர்­வாக மற்றும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன, அமைச்சின் செய­லாளர் காமினி சென­வி­ரத்ன ஆகி­யோ­ருக்கு நாளை புதன்கிழமை இரண்டாம் ஆம் திகதி மன்றில் விளக்­க­ம­ளிக்க உத்­த­விட்டப்பட்டுள்ளது.

அத்துடன் நீதி­மன்றம், கோட்டாபய ராஜ­ப­க்சவின் சர்ச்­சைக்­கு­ரிய கடவுச் சீட்டு, அடை­யாள அட்டை தொடர்­பான அனைத்து ஆவ­ணங்­க­ளையும் மேன் முறையீட்டு நீதி­மன்றில் ஒப்­ப­டைக்­குமாறும் உத்தரவிடப்பட்டிருந்தது.

இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாமலேயே கோட்டாபய ராஜபக்ச இலங்கைக் கடவுச் சீட்டு, இலங்கைத் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றைப் பெற்றிருந்ததாக மனுவில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையிலேயே குறித்த உயர் அதிகாரிகளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்சவுக்கு மேலதிகமாக பெயரிடப்பட்டுள்ள அவரது சகோதரரான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பன அவரின் கீழ் பணியாற்றும் இளநிலைச் சட்டத்தரணிகளான நவீன் மாரப்பன, கணேஷ் தர்மவர்தன உள்ளடங்கிய குழுவினரும், அமைச்சர் வஜிர அபேவர்தன , ஏனைய அரச ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நரின் புள்ளேயும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.

கோட்டாபய ராஜபக்ச சார்­பில் முன்னிலையான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி­களான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ர­ணி­க­ளான சுகத் கல்­தேரா, ருவந்த குரே, ஹரித் டி மெல் ஆகியோர் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சனத் விஜே­வர்­த­னவின் அறிவுறுத்தலுடன் முன்னிலையாகியிருந்தனர்.

அர­சியல் காழ்ப்­பு­ணர்ச்சி கார­ண­மாகத் தாக்கல் செய்­யப்­பட்ட மனு என்று ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா நீதியரசர்கள் முன்னிலையில் கூறினார். இந்த வழக்கு அடிப்படையில் ஆதாரமற்றது என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். கோட்டாயப ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியுடையவரெனவும் சட்­டத்­த­ரணி ரொமேஷ் டி சில்வா தனது வாதங்களை முன்வைத்தார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்றும் பொய்யான காரணங்களின் அடிப்படையில் இலங்கைப் பிரஜாவுரிமையின்றி இலங்கைக் கடவுச் சீட்டு. தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றமை தேசத் துரோகம் என்றும் மனுதாரர்கள் கூறியிரு்ந்தனர்.

இரண்டு தரப்பு விவாதங்களையும் பரிசீலித்த கொழும்பு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றப் பிரதான நீதியரசர் யசந்த கோதா­கொட, இந்த மனுவில கூறப்பட்டுள்ள விட­யங்கள், அர­சியல் ரீதி­யான கார­ணி­கள் என்பதால் மூவ­ர­டங்­கிய நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் விசா­ரிப்பதாக அறிவித்தார்.

நீதி­யரசர் மஹிந்த சம­ய­வர்­த­ன­ உட்பட மூவர் கொண்ட நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் நாளை புதன்கிழமை முதல் இந்த மனு மீதான விசாரணை பரி­சீ­ல­னைக்கு எடுக்கவுள்ளதாக நீதியரசர் யசந்த கோதா­கொட அறிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ச மீதான இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக இலங்கைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணை நடத்தி வருகின்றது. இந்த விசாரணை தொடர்பாகவும் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்படவுள்ளது.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச போட்டியிடுகிறார்.

மக்கள் சக்தி இயக்கம் என்ற அமைப்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் இலங்கை இராணுவத் தளபதியாகப் பதவி வகித்துக் கடந்த ஓகஸ்ட் மாதம் ஓய்வு பெற்ற மகேஸ் சேனநாயக்காவும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் போட்டியிட இதுவரை 17 பேர் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாக இலங்கைத் தேர்தல்கள் திணைக்களம் கூறியுள்ளது.