இலங்கை ஜனாதிபதித் தேர்தல்

அதிகாரப் பகிர்வுக்கான பணிகள் தொடருமாம் - ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்

கட்சியின் சம்மேளனக் கூட்டத்தில் ரணில் அறிவிப்பு
பதிப்பு: 2019 ஒக். 03 16:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 04 10:19
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென கட்சியின் எழுபத்து ஏழாவது சம்மேளனக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சம்மேளனக் கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் தாயார் ஹேமா பிரேமதாசவை மேடையில் அழைத்துக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பளராகவே சஜித் பிரேமதாச செயற்படுவாரென்றும் சம்மேளனக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து பதவி வகிப்பாரென்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்டதும் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது இலங்கை நாடாளுமன்றத்தை உரிய முறையில் செயற்படுத்திய சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குப் பாராட்டும் தெரிவிக்கபட்டது.

அதேவேளை, அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றைச் செய்வதற்கான பணிகள் தொடருமெனவும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முக்கியமாக 2015 ஆம் ஆண்டு செய்யப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான சீர்திருத்தம் தொடரும் என்று தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம், செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்களும் ஆதரவாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.