அமெரிக்க, இலங்கை இரட்டைக் குடியுரிமைச் சர்ச்சை

கோட்டாபய மீதான விசாரணை - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

பிரஜாவுரிமைப் பத்திரம் சட்டவலுவுள்ளதென்கிறார் மகிந்த தரப்புச் சட்டத்தரணி - இல்லையென்கிறது மறுதரப்பு
பதிப்பு: 2019 ஒக். 03 22:40
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 04 10:16
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#gotabayarajapaksa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மீதான வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜனப் பெரமுனக் கட்சியின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்சவின் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் வலுவற்றது என்றும் அதனை இரத்துச் செய்யுமாறு கோரியும் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனு மீதான விசாரணை நேற்றுப் புதன்கிழமை ஆரம்பித்து இன்று வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தும் இடம்பெற்றது. நீதியரசர் யசந்த கோத்தாகொட தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர் குழு இந்த விசாரணையை நடத்துகிறது.
 
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் சார்பாக பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர, சட்டத்தரணி காமினி வியங்கொட ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

இரண்டாம் நாளான இன்று பிற்பகல் 1.45 அளவில் மனுமீதான வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பமாகின. மனுவில் மூன்றாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அரச நிர்வாக அமைச்சரான வஜிர அபேவர்தன சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகிய சட்டத்தரணி சானக டி சில்வா தனது வாதத்தை முன்வைத்தார்.

மகிந்த ராஜபக்ச நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் கோட்டாபய ராஜபக்சவின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விடயத்துக்குரிய அரச திணைக்களம் ஒன்றின் அதிகாரமுள்ள தலைவராகக் கையொப்பமிட்டிருக்க முடியாதென்று சட்டத்தரணி சானக டி சில்வா தனது வாதத்தில் கூறியிருந்தார்.

அதிகாரத்தின் அடிப்படையானது அரசியலமைப்பாகும். மாறாக ஜனாதிபதியல்ல என்றும் சுட்டிக்காட்டிய சட்டத்தரணி சானக டி சில்வா, இலங்கை அரசாங்கத்தின் தலைவராக செயற்படும் ஜனாதிபதிக்கு அந்தப் பதவியை பயன்படுத்த வேண்டுமாயின் முதலாவது அமைச்சரவை தலைமையிலான அரசாங்கம் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

முதலாவது அமைச்சரவை கலைக்கப்பட்டதொரு நிலையில் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றை நிர்வகிக்க அமைச்சர்கள் இல்லாதவொரு சந்தர்ப்பத்தில் மகிந்த ராஜபக்ச நிறைவேற்று ஜனாதிபதி என்ற அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் சார்பிலோ, குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தைச் செயற்படுத்தும் பொறுப்பு அவரிடம் உள்ளது என்ற முறையிலோ கையொப்பமிட்டிருக்க முடியாதெனவும் சானக டி சில்வா விரிவாகச் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் நெறிப்படுத்தல் மற்றும் நிர்வாகம் என்பன அமைச்சரவைக்கு உரித்துடையதாகும் என்பதோடு மாறாக அவை தனிநபரான ஜனாதிபதிக்கு உரித்துடையதல்ல என்றும் சட்டத்தரணி சானக டி சில்வா தனது வாதத்தை முன்வைத்தார்.

இந்த வாதத்தின்போது சந்தேகமொன்றை எழுப்பிய நீதியரசர்கள் குழாமின் தலைவரான நீதியரசர் யசந்த கோத்தாகொட, ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்று ஒருவர் தெரிவாகிய நிலையில், அமைச்சரவை நியமனம் இடம்பெறாத சந்தர்ப்பத்தில் தனி நபரான ஜனாதிபதிக்கு அதன் அதிகாரங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இலங்கை அரசியலமைப்பில் இல்லையா என்று கேட்டார்.

இந்தக் கேள்விக்கு விளக்கமளித்த சட்டத்தரணி சானக டி சில்வா, அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாத சூழ்நிலையில், அந்த அமைச்சருக்குரிய திணைக்களத்தின் செயற்பாடுகளை அதன் தலைவர் அல்லது பணிப்பாளர்களினால் மாத்திரமே நிர்வகிக்க முடியும் என்று பதிலளித்தார்.

அந்த இடத்தில் தனி நபரான ஜனாதிபதி நிர்வகிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும் அந்தத் திணைக்களம் தொடர்பான ஆவணம் ஒன்றுக்கு ஜனாதிபதியால் கையொப்பமிட முடியாதென்றும் வாதிட்டார்.

மூன்றாவது பிரதிவாதி சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி சானக டி சில்வா சுமார் ஒன்றரை மணிநேரமாக தன்தரப்பிலான வாதத்தை முன்வைத்திருந்தது மேலும் பல விளக்கங்களைக் கொடுத்தார். அரசியலமைப்பு விதிகளையும் காண்பித்தார்.

அப்போது குறுக்கிட்ட கோட்டாபய ராஜபக்ச தரப்பு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, பிரதிவாதியின் சட்டத்தரணி தேவையற்ற முறையில் நேரத்தைச் செலவிட்டுத் தனது தரப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குற்றம் சுமத்தினார்.

இந்த வாதப்பிரதி வாதங்களைக் கவனத்திற்கொண்ட நீதியரசர்கள் குழாம், தேவையற்ற வாதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு சட்டத்தரணி சானக டி சில்வாவுக்கு அறிவுறுத்தினர்.

அதனை ஏற்றுக்கொண்ட சானக டி சில்வா அமைச்சர் வஜிர அபேவர்தன சார்பான மேலும் பல வாதங்களை ஆதாரங்களோடு முன்வைத்தார். கோட்டாபய ராஜபக்ச சார்பாக முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைக் குடியுரிமைக்கான விண்ணப்பப் படிவத்தை அமைச்சர் இதுவரை கண்டதே இல்லையென சானக டி சில்வா கூறினார்.

ஒன்றரை மணிநேர வாதத்தை அடுத்து கோட்டாபய ராஜபக்ச சார்பான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது தரப்பு வாதத்தை ஆரம்பித்தார்.

அதிகாரம் என்பது இறையாண்மையிலிருந்து ஆரம்பமாகின்றது என்ற அடிப்படையில் மக்களிடம் உள்ள இறைமைக்கான அதிகாரத்தைப் பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லையென்று குறிப்பிட்டார்.

1978ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு அமைவாக மக்களின் இறைமை அடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும், அந்த நிலையிலிருந்து நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதியினால் பயன்படுத்த முடியும் என்றும் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியினால் அமைச்சர்களை நியமிப்பதற்கும், அவர்களுக்குரிய விடயதானங்களையும் அதற்குரிய அதிகாரங்களையும் பகிர்ந்தளிக்கவும், தனக்குரிய முறையில் அந்த விடயதானங்களில் சிலவற்றை வைத்திருக்கவும் ஜனாதிபதிக்கு உரிமை இருப்பதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு அமைச்சர்களுக்குப் பிரித்துக்கொடுக்காத அத்தனை அதிகாரங்களும் ஜனாதிபதிக்கே உரியதாகும் என்றும் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா விளக்கமளித்தார்.

ஜனாதிபதிக்கு அந்த அதிகாரங்கள் இருந்தால் மாத்திரமே அமைச்சர்களுக்கு அமைச்சுக்களையும், விடயதானங்களையும் அதற்குரிய அதிகாரங்களையும் ஜனாதிபதியால் பகிர்ந்தளிக்க முடியும் என்றும், இதனடிப்படையில் இந்த மனுவில் ஆறாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அப்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்த மஹிந்த ராஜபக்சவினால் கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ் முழுமையான சட்டவலு கொண்டது என்றும் எடுத்துக் கூறினார்.

இந்த வாதப் பிரதிவாதங்களை செவிமடுத்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அடுத்தகட்ட விசாரணைகளை நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்தனர். இறுதித் தீர்ப்பும் நாளை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்ததும் சந்திரிக்கா ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது செயற்பட்ட அமைச்சரவையைக் கலைத்திருந்தார்.

புதிய அமைச்சரவை தெரிவு செய்யப்படுவதற்கு முன்னரே கோட்டாபய ராஜபக்சவுக்காக இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பாகவே சமூகநீதிக்கான தேசிய இயக்கம் மனு ஒன்றைக் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.

ஓகஸ்ட் ஐந்தாம் திகதி இலங்கைப் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு எழுத்து மூலம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே கடந்த வாரம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.