கொழும்பில் இருந்து வெளியாகும் வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பாக

யாழ் செய்தியாளர் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணை

கோட்டாபய ராஜபக்ச, டக்களஸ் தேவானந்தா, வரதராஜபெருமாள் ஆகியோர் குறித்த செய்தியே காரணம்
பதிப்பு: 2019 ஒக். 04 16:10
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 05 01:31
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#tamiljurnalist
#media
கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகையில் பிரசுரமான செய்தி தொடர்பாக வீரகேசரி நிறுவனத்தின் யாழ்ப்பாண அலுவலகச் செய்தியாளர் தி.சோபிதன் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விசாரணை இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற்படுவதாக வெளி வந்த செய்தி தொடர்பாகவே சோபிதன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
 
ஆனால் சோபிதன் கடந்த மாதம் இரண்டாம் திகதி விபத்து ஒன்றில் சிக்கி நடக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் விசாரணையை யாழ்ப்பாணத்தில் நடத்துமாறும் அவருடைய சட்டத்தரணி பொலிஸ் தலைமை அலுவலகத்திடம் கேட்டிருந்தார்.

எனினும் விசாரணைக்குரிய திகதியை மாற்றித் தர முடியுமெனவும் விசாரணைக்கு கொழும்புக்கே வர வேண்டுமென்றும் பொலிஸ் தலைமையக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதனால் சோபிதன் இன்று கொழும்புக்கு தனது சட்டத்தரணியோடு விசாரணைக்குச் சமூகமளித்திருந்தார். சுமாா் இரண்டரை மணித்தியாலம் விசாரணை இடம்பெற்றது.

கோட்டாபய ராஜபக்சவோடு ஈபிடிபி செயலாளர் டக்களஸ் தேவானந்தா, முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜபெருமாள் ஆகியோர் இணைந்து தமிழ் மக்களை மேலும் நசுக்க முற்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மரிய சுரேஸ் ஈஸ்வரி யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.

அது தொடர்பான செய்தியே வீரகேசரிப் பத்திரிகையில் வெளி வந்தது. அந்த செய்தி தொடர்பாகவே யாழ் செய்தியாளர் சோபிதன் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இந்த செய்தி தொடர்பாக குறித்த செய்தியாளர் கொழும்பு பொலிஸ் தலைமையகத்துக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டமை குறித்து கொழும்பில் உள்ள எந்தவொரு ஊடக அமைப்புகளும் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஊடக சுதந்திரம் ஊடக ஜனநாயகம் வடக்குக் கிழக்குத் தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாகவே மீறப்பட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் ஊடக அமைப்புகள் இது குறித்து மௌனமாக இருப்பதாக தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் கவலை வெளியிட்டார்.

அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி மரிய சுரேஸ் ஈஸ்வரி யாழ் ஊடக மையத்தில் வெளியிட்ட கருத்துக்கு எதிராக டக்களஸ் தேவானந்தா இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதனால் மரிய சுரேஸ் ஈஸ்வரி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணையின் தொடர்ச்சியாகவே சோபிதன் கொழும்புக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.