இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது அமைப்புகள் ஒன்றுகூடி

சிவாஜிலிங்கத்தை ஆதரிக்கத் தயாராக வேண்டும் - ஆய்வாளர் ஜோதிலிங்கம்

பொதுவான குறியீடாகக் கருதி தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்த முடியும் என்றும் கூறுகிறார்
பதிப்பு: 2019 ஒக். 11 18:26
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 14 21:58
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தைப் பொது வேட்பாளராகக் கருதி மக்களை வாக்களிக்க வைப்பது குறித்து சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டுமென அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.ஆ. ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். சிவாஜிலிங்கம் தொடர்பாக எதிர்மறைக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனாலும் அது பற்றிய விமர்சனங்களைத் தற்போதைக்குக் கைவிட்டு சிவாஜிலிங்கத்தை ஒரு குறியீடாகக் கருதி வாக்களிப்பது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்றும் ஜோதிலிங்கம் கூறினார். சிங்களக் கட்சிகளின் இரு பிரதான வேட்பாளர்களையும் தமிழ் மக்கள் நம்பத் தயாராகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
அரசியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் ஜோதிலிங்கம்
அரசியல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியம் ஜோதிலிங்கம்
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த சிவில் அமைப்புகள் எடுத்த முயற்சி தொடர்பாகவும் சிவாஜலிங்கம் போட்டியிடுகின்றமை குறித்தும் கூர்மைச் செய்தித் தளம் ஜோதிலிங்கத்திடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியற் பிரமுகரும் முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் நாடாளுமன்ற உறுப்பினருமான ம.க. சிவாஜிலிங்கத்தை தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் பிராந்திய அரசியற்பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலன் அவர்களின் துணைவியாரும் பின்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் ஆதரித்து தனது நிலைப்பாட்டை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிக்கையிட்டிருந்தார்..

இந்த நிலையில் சிவாஜிலிங்கத்தை ஒரு குறியீடாகக் கருதி வாக்களிப்பது தொடர்பாக ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கருத்து வெளியிட்டுள்ளார்.

இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் தமிழ் இன அழிப்புக் கட்சிகள்தான். ஆகவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கலாமா என்பது குறித்து யோசிக்க வேண்டும். அந்த இடத்திலேதான் பொது வேட்பாளர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டதாக ஜோதிலிங்கம் கூறியுள்ளார்.

இவ்வாறு பொது வேட்பாளரை நிறுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் ஒரு தேசமாக நிற்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும். அத்துடன் இதனை தமிழ் மக்களின் கருத்துக் கணிப்பாகக் கூட கருத முடியும். எனவே இதனைப் பயன்படுத்த வேண்டும் என்று ஜோதிலிங்கம் கூறினார்.

ஆனால் பொது வேட்பாளர் விவகாரத்தில் அரசியல் கட்சிகளின் ஒழைப்புக் கிடைக்காததினாலும் கால அவகாசம் போதியதாக இல்லாமையினாலும் இந்த முயற்சி பயனளிக்கவில்லை. ஆனால் சிவாஜிலிங்கம் தமிழ் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார்.

எனவே சிவாஜிலிங்கத்தை ஒரு குறியீடாக வைத்துக் கொண்டு தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்து தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது தொடர்பாக சிந்திக்கலாமா என்பது பற்றி உரையாடல்களை சிவில் அமைப்புகள் நடத்த வேண்டும் என்று ஜோதிலிங்கம் கூறினார்.

சிவாஜிலிங்கம் தொடர்பாக பல விமர்சனங்கள் உள்ளன. ஆனாலும் அவருடைய தேசியப் பக்கத்தில் உள்ள நல்ல விடயங்களை வைத்துக் கொண்டு சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பது தொடர்பாக சிந்திக்கலாம்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை இக்கட்டான காலகட்டத்தில் செய்தமை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய தாயாரின் மரணச் சடங்கை நெருக்கடியானதொரு சூழலில் செய்து முடித்தமை உள்ளிட்ட பல நல்ல பக்கங்கள் தேசியம் சார்ந்து உள்ளன.

எனவே சிவாஜிலிங்கத்தைக் குறியீடாக வைத்துக் கொண்டு மக்கள் வாக்களிப்பது குறித்து உரையாடி சில முடிகளை எடுக்க வேண்டும் என்று ஜோதிலிங்கம் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.