வடக்குக் கிழக்கு ஈழத் தமிழர்களின்

அரசியல் விடுதலைக்கான சமஸ்டி ஆட்சியைக் கோரியுள்ளோம்- சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம்

கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களையும் சந்திக்கவுள்ளதாகக் கூறுகின்றார்
பதிப்பு: 2019 ஒக். 15 17:59
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 15 23:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
திம்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான ஒரு உடன்பாட்டை எட்ட முடியாமல் போனமைக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிடிவாதமே காரணம் என்று ஈபிஆா்எல்எப் கட்சியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறியுள்ளார். கலந்துரையாடல்களில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தாங்கள் வெளியேற்றவில்லை என்றும் அவர்கள் தாமாகவே வெளியேறினார்கள் எனவும் அவர் கூறினார். ஆவணத்தில் கையொப்பமிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் ஒரு குழுவாகச் சென்று கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் இந்த முயற்சி வெற்றிபெறுமா இல்லையா என்பதைத் தற்போதைக்கு கூற முடியாதென்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் கூறினார்.
 
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்களிடம் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை முன்வைக்கும் நோக்கில் ஐந்து கட்சிகள் இணைந்து ஆவணம் ஒன்றை உருவாக்கியுள்ளன. அந்த ஆவணத்தில் கையொப்பமும் இடப்பட்டுள்ளன.

சுரேஸ்
விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஈபிஆா்எல்எப் கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன்
இது தொடர்பாக சுரேஸ் பிரேமச்சந்திரன் வழங்கிய சிறப்பு நேர்காணலின் முழுமையான விபரம் வருமாறு-

கேள்வி- இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டதா வெளியேறியதா?

பதில்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தாமாகவே வெளியேறியது. இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால வரைபை நிராகரிப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். ஆனால் அதனைத் தமிழ்க் கட்சிகள் ஏற்றுக் கொள்ள்வில்லை. இதனால் ஆவணத்தில் கையொப்பமிட முடியாது என்று கூறி அவர்கள் வெளியேறினர்.

கேள்வி- உங்கள் ஆவணத்தின் முதல் பக்கத்தில் உள்ள கோரிக்கையில் இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை நிராகரிப்பதாகக் கூறப்பட்டுத் தமிழ்த் தேசம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அதில் சொல்லப்படுகின்றது. ஆகவே அந்த அடிப்படையில் புதிய அரசியல் யாப்பு ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழ்தானே வருகின்றது? எனவே அதனை நிராகரிப்பதாக ஆவணத்தில் குறிப்பிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

பதில்- ஏற்கனவே சமஸ்டிக் கோரிக்கையின் அடிப்படையில் தீர்வு ஒன்று அமைய வேண்டுமென நாங்கள் கோரினாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிய யாப்பை நிராகரிக்கும் விடயத்தையும் கட்டாயம் சேர்க்க வேண்டுமென வலியுறுத்தியிருந்தது. ஏனென்றால் அது ஒற்றையாட்சி முறைமைக்குள் இருப்பதால் அதனை நிராகரிக்க வேண்டுமென அவர்கள் கூறினார்கள்.

ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளது. இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை இவர்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள், நடைமுறைப்படுத்துவார்கள் என்பதை அறிந்து கொண்டு அதனை அவதானித்து அந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அந்தக் கோரிக்கையை எற்றுக்கொள்பவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போதும்

ஆனால் அதனை ஏனைய கட்சிகள் ஏற்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் சுமார் எட்டு மணிநேரம் இந்த விடயம் தொடர்பாகப் பேசப்பட்டது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. இதனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வெளியேறியுள்ளது.

கேள்வி- பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேச்சுக்களின் போது கலந்துகொண்ட ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தத்தமது கருத்துக்களை அறிக்கைகளாகக் கையளித்திருந்தார்கள் அல்லவா? ஆகவே அந்த அறிக்கைகளையும் இந்த ஆவணத்தின் இணைப்பாகச் சேர்த்திருக்கலாம்தானே?

பதில்- தமிழரசுக் கட்சி, புளொட், ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் தமது கருத்துக்களை அறிக்கைகளாகச் சமர்ப்பித்திருந்தார்கள். அவையெல்லாம் சேர்க்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்கள் அனைத்தும் ஒரு பொது ஆவணமாக தயாரிக்கப்பட்டது. அந்த விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பல விடயங்களை ஏற்றுக்கொண்டது.

சில விடயங்களில் மாத்திரமே கலந்துரையாடப்பட்டது. அதுவே ஆவணமாகவும் தயாரிக்கப்பட்டது. ஆனாலும் புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு தொடர்பாக அவர்கள் தொடர்ந்து பேசினார்கள். எனினும் இந்த விடயங்கள் தற்போதைக்குத் தேவையில்லை. நாங்கள் பேசுகின்ற விடயங்கள் வேறு. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறப்பட்டது அத்துடன் இடைக்கால வரைபு தற்போது பேசப்படுவதில்லை. கைவிடப்பட்டுள்ளது என்றெல்லாம் ஏனைய கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனாலும் புதிய வரைபை நிராகரிக்க வேண்டும் என்று பிடிவாதமாக நின்றார்கள். அப்படி இல்லையேல் இந்த ஆவணத்தில் கையொப்பமிட முடியாது என்றும் கூறிவிட்டு தாமாகவே வெளியேறினார்கள்.

கேள்வி- இந்த ஆவணத்தில் மூன்று மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளீர்கள், ஆனால் இந்த ஆவணத்தை ஏற்றுக் கொண்டு, பெற்றுக் கொண்ட வேட்பாளர் ஒருவர் இதில் கூறப்பட்ட விடயங்களை மூன்று மாதங்கள் சென்ற பின்னரும் நிறைவேற்றவில்லை என்றால் நீங்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வீர்கள்?

பதில்- முதலாவதாக ஐந்து கட்சிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்று வேட்பாளர்களையும் அவர்களின் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசவுள்ளது. இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை இவர்கள் எவ்வளவு தூரம் ஏற்றுக்கொள்வார்கள், நடைமுறைப்படுத்துவார்கள் என்பதை அறிந்து கொண்டு அதனை அவதானித்து அந்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாக இருந்தால் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு நாங்கள் வாக்களிப்போம்.

ஆனால் அவ்வாறு இல்லாமல், அவர்கள் அதனை எற்றுக் கொள்ளாது விட்டால் நாங்கள் பின்னர் ஒன்று கூடி அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று ஆலோசிப்போம்.

கேள்வி- சிங்கள ஆட்சியாளர்கள் எழுதப்பட்ட உடன்படிக்கைகளை கிழித்தெறிந்தவர்கள் அல்லது கைவிட்டவர்கள். இந்த நிலையில் நீங்கள் நம்புகின்றீர்களா இந்த வேட்பாளர்களில் ஒருவர் ஜனாதிபதியாக வந்ததும் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவாரா என்று?

பதில்- நிச்சயமாக நீங்கள் சொல்வதில் நூறுவீதம் உண்மை உண்டு. இந்த விடயம் எங்களுடைய சந்திப்பில் விவாதத்துக்குரியதாகவும் இருந்தது. ஏற்கனவே இவர்கள் எவ்வளவு தூரம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரித்திருக்கிறார்கள்.

ஆகவே இப்பொழுது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது குறித்து எல்லோராலும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக சர்வதேச சமூகத்துடனும் பேசவுள்ளோம்.

நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் இரண்டு வகையானது ஒன்று மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகள், போருக்குப் பின்னரான சூழலில் மக்களின் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது. இரண்டாவது அரசியல் தீர்வு குறித்தது.

ஆகவே இந்த விடயங்களை இவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பது குறித்து நாங்கள் சர்வதேச சமூகத்தோடு பேசவுள்ளோம். இதில் எவ்வளவு தூரம் வெற்றிகாண முடியும் என்பது ஒரு கேள்வியாக இருந்தாலும் நாங்கள் முயற்சிப்போம்.

கேள்வி- இந்த ஆவணம் தனியே தமிழ் மொழியில் எழுதப்பட்டு கையொப்பமிடப்பட்டுள்ளது. ஆனால் சிங்கள வேட்பாளர்களிடம் கையளிக்கப்படும்போது இதில் உள்ள விடயங்கள் அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுமா?

பதில்- ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கவுள்ளோம். அதற்கான எற்பாடுகள் நடைபெறுகின்றன.

கேள்வி- சரி இந்த வேட்பாளர்களை உருவாக்கும் விடயத்தில் கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்தியத் தூதுவர்கள் ஈடுபட்டார்கள் என்பது குறித்து வெளிப்படையாகவே செய்திகள் வெளியாகியிருந்தன. ஆகவே இந்த ஆவணத்தை தயாரிப்பதற்கு முன்னர் நீங்கள் வெளிநாட்டுத் தூதுவர்கள் யாரையாவது சந்தித்துப் பேசியிருந்தீர்களா? உத்தரவாதம் எதுவும் பெறப்பட்டதா?

பதில்- அவர்களிடம் இருந்து எந்தவிதமான உத்தரவாதமும் பெறப்படவில்லை. அவர்களுடன் பேசவும் இல்லை. ஆனால் அவர்களோடு பேச நாங்கள் முயற்சி எடுப்போம். அவர்களோடு பேச வேண்டும் என்ற முடிவுகளையும் நாங்கள் எட்டியுள்ளோம்.

கேள்வி- சரி நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த ஆவணத்தை தயாரித்துள்ளீர்கள். ஆகவே வரவுள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு கட்சிச் சின்னத்தில் போட்டியிடக் கூடிய வாய்ப்பு வருமா?

பதில்- இல்லை- இது முக்கியமாக ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டே நாங்கள் ஒற்றுமைப்பட்டுள்ளோம். ஆகவே இது நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தொடர்ந்து அவ்வாறு இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இது ஜனாதிபதித் தேர்தலை மாத்திரமே நோக்கமாகக் கொண்டது. அடுத்த கட்டத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது இந்த விடயங்களின் செயற்பாடுகளில் தங்கியுள்ளது.

கேள்வி- 1985 ஆம் ஆண்டு திம்புவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது அனைத்துக் கட்சிகளும் இயக்கங்களும் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தன. அரசியல் தீர்வு விடயத்தில் கூட கோட்பாட்டு ரீதியான உடன்பாடுகள் கூட எட்டப்பட்டிருந்தன. ஆனால் இந்தக் கலந்துரையாடலில் நீங்கள் அவ்வாறு செயற்படவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வெளியேற்றப்பட்டதன் நோக்கம் என்ன?

பதில்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியாக இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றதை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இந்த விவகாரத்தில் மாத்திரமல்ல. பல்வேறு நடவடிக்கைகளின்போதும் அவர்கள் இறுக்கமாகவே செயற்பட்டு வந்திருக்கிறார்கள்.

ஆகவே திம்புவில் நடந்தது போன்று சில விடயங்களில் உடன்பட அவர்கள் தயராகவில்லை. அவ்வாறு நடக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதாக இருந்தால், அவர்கள் முதலில் தாம் செய்கின்ற தவறுகளை சீர்திருத்த வேண்டும். அவ்வாறு திருந்திக் கொண்டால் நிச்சயமாக எதிர்காலத்தில் மாற்றங்களைக் காண முடியும்.

கேள்வி- பொது வேட்பாளர் ஒருவரைத் தேடித் திருந்தீர்கள் சிவில் அமைப்புகள் அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டன. ஆனால் முடியவில்லை. எனினும் சிவாஜிலிங்கம் தாமாகவே சென்று போட்டியிடுகின்றார். ஆகவே அவரைப் பொது வேட்பாளராகக் கருதி அவருக்கு வாக்களித்து இரண்டாவது விருப்பு வாக்கை ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட பெத்தேகம நந்திமித்திர, நாமல் ராஜபக்ச போன்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு நீங்கள் கூறலாமே?

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தமிழ் மக்கள் நீண்டகாலமாக போராடினார்கள். தொடர்ந்தும் போராடி வருகிறார்கள். ஆகவே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதால் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கையின் பொருளாதாரமும் பன்மடங்கு உயரும். ஆகவே அனைத்து வேட்பாளர்களும் இந்த விடயத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அது ஸ்ரீலங்காவுக்கும் நல்லது

பதில்- அவ்வாறு எந்தத் தேவையும் எழவில்லை. நாங்கள் முக்கியமாகப் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் எங்களின் முழு முயற்சியும். எங்களுக்குப் பல தேவைகள் உண்டு அந்தத் தேவைகளின் அடிப்படையில்தான் வாக்குகளை அளிக்க வேண்டும் என்பது பற்றியும் நாங்கள் யோசித்திருக்கின்றோம்.

சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கு முன்னதாக எந்தக் கட்சியோடும் அவர் ஆலோசனை நடத்தவில்லை. தான் சார்ந்த கட்சியோடும் பேசியதாகத் தெரியவில்லை. தனித்து நின்றே எல்லாம் செய்கிறார்.

ஆகவே அவ்வாறான நிலையில் அது தொடர்பான கருத்துக்களை உருவாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி- ஆகவே நீங்கள் நம்புகின்றீர்களா வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர்களின் இறைமையுடன் சுயநிர்ணய உரிமையோடு கூடிய அரசியல் தீர்வுக்கு பிரதான வேட்பாளர்களில் ஒருவர் இணங்கி வருவார் என்று?

பதில்-இணங்குவார்களா இணங்கி வருவார்களா என்பது முக்கியமல்ல. தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வை முதன்மைப்படுத்தி நாங்கள் கூறியிருக்கின்றோம். அது மாத்திரமல்ல ஏனைய விடயங்கள் பற்றியும் நாங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்காக தமிழ் மக்கள் நீண்டகாலமாக போராடினார்கள். தொடர்ந்தும் போராடி வருகிறார்கள். ஆகவே பிரச்சினைக்குத் தீர்வு காண்பதால் தமிழ் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கையின் பொருளாதாரமும் பன்மடங்கு உயரும். ஆகவே அனைத்து வேட்பாளர்களும் இந்த விடயத்தை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அது ஸ்ரீலங்காவுக்கும் நல்லது.