இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

இலங்கையின் இறைமை பிரிக்கப்படாது- தேர்தல் விஞ்ஞாபனம் விரைவில் என்கிறார் மங்கள

சிங்கள நாளிதழ்களில் வெளிவந்த செய்திகளுக்கு மறுப்பு வெளியிட்டார்.
பதிப்பு: 2019 ஒக். 17 09:41
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 17 19:14
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#ranilwickremesinghe
#SajithPremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆதரவுகளைத் தெரிவித்து செய்திகள், செய்திக் கட்டுரைகளை வெளியிட்டு வரும் சிங்கள நாளிதழ்கள் தமிழ்க் கட்சிகள் ஆதரவு வழங்குவதற்காக முன்வைக்கும் கோரிக்கைகளை கடும் இனவாதமாகச் சித்தரித்து வருகின்றன. வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள சிங்களக் கிராமங்கள், விகாரைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள நாளிதழில் பிரசுரமான செய்திகளை கட்சியின் மூத்த உறுப்பினர் அமைச்சர் மங்கள சமரவீர மறுத்துள்ளார். இலங்கையின் இறைமை பிரிக்கப்படாதென்றும் கூறினார்.
 
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் சிங்களக் குடியேற்றங்களை அகற்றுவது தொடர்பாக எதுவுமே இல்லை என்றும் விகாரைகளை இடிப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இறைமைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி கைச்சாத்திடவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் செய்யப்பட்ட உடன்படிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் மங்கள சமரவீர கொழும்பில் நேற்றுப் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையின் இறைமையை உறுதிப்படுத்தும் கொள்கைகள் வெளியிடப்படும் எனவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.

அதேவேளை, ஈழத் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை முன்நிறுத்தி ஐந்து தமிழ்க் கட்சிகள் தயாரித்த ஆவணத்தை ஏற்க முடியாதென மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் அறிவிப்பாரென்று முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்தகமகே செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.