யாழ், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஐக்கியத்துக்கான முயற்சி

வாக்குறுதிகளை வழங்கித் தடம் புரண்ட தமிழ்க் கட்சிகள் ஆவணத்துக்குப் பொறுப்புக் கூறுமா? ஆய்வாளர் நிலாந்தன்

அடிப்படைப் பிரச்சினையும் உடனடித் தேவையும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும் கூறுகிறார்
பதிப்பு: 2019 ஒக். 17 16:00
புதுப்பிப்பு: ஒக். 19 00:18
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#PresPollSL
#LKA
#tamil
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியினால் தமிழ்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி ஆவணம் ஒன்றைத் தாயரித்துக் கையொப்பமிட்டமை முன்னேற்றகரமான அம்சம் என்று சிவில் சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான எம் நிலாந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்துள்ளார். ஆனாலும் கடந்த காலங்களில் தேர்தல் விஞ்ஞாபனங்களில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளில் இருந்து தடம்புரண்ட இந்தக் கட்சிகள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளவற்றை தொடர்ச்சியாகப் பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் நிலாந்தன் வலியுறுத்திச் சொன்னார்.
 
நிலாந்தன்
சமூகச் செயற்பாட்டாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன்
நிலாந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் முழுமையான விபரம் வருமாறு-

கேள்வி-இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முன்மொழிவுகள் குறித்துப் போரின் பின்னரான பத்து ஆண்டுகளில் ஐந்து கட்சிகளும் கலந்துரையாடிய பின்னர் இணைந்து ஆவணம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர். ஆனாலும் இந்தப் பேச்சுக்கள் நேர்மையோடு செய்யப்பட்டதாக உங்களால் கூறமுடியுமா?

பதில்- ஓம் இதில் ஒரு நேர்மையுண்டு. ஏனெனில் எல்லோருக்குமிடையில் ஒரு பொதுக் கருத்தை எட்ட வேண்டுமென பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சித்தவர்கள். ஏற்கனவே பேரவை நியமித்த குழுவும் அப்படியொரு பொதுக் கருத்தை ஏற்படுத்த முயற்சித்திருந்தது. எனவே இதில் தமிழ் ஐக்கியம் (Solidarity) ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற முயற்சி இருக்கின்றது. அந்த முயற்சி ஓரளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது.

கேள்வி- இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மீறி பிரதான சிங்கள வேட்பாளர்கள் இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஏற்பதற்கான வாய்ப்பு உள்ளதா?

எங்களிடம் இருக்கும் எல்லாக் கட்சிகளுமே தேர்தல் மையக் கட்சிகள்தான். எங்களிடம் மக்கள் இயக்கம் இல்லை. மக்கள் இயக்கம் இருந்தால் மக்களை ஒன்று திரட்டி தெருவுக்குக் கொண்டு வருவது வேறு கதை. ஆனால் இப்போது இருக்கிற எல்லாமே தேர்தல் மையக் கட்சிகள்தான். எனவே எங்களுக்கு இருக்கும் ஒரு பரீட்சைக்களம் தேர்தல் களம்தான்

பதில்- இதுதான் பிரச்சினை. இந்தப் பொது ஏற்பாடு முன்னேற்றகரமான அம்சம். தமிழ் மக்கள் பேரவை முன்மொழிந்த அந்தத் தீர்வுத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் அந்தத் தீர்வுத்திட்டத்திற்குப் பிறகு பிந்தி வந்த ஒரு ஆவணமாக இதைச் சொல்லாம். அப்படிப் பார்த்தால் இது ஒரு முன்னேற்றகரமான ஆவணம்.

அதேநேரம் இரண்டு அடிப்படைப் பிரச்சினைகள் உண்டு. ஒன்று பொறுப்புக் கூறல். அதாவது இதற்குச் சம்மந்தப்பட்ட தமிழ்க் கட்சிகள் பொறுப்பாக இருக்குமா என்பது. இரண்டாவது இந்த ஆவணத்தைக் கொண்டுபோய் சிங்கள வேட்பாளர்களிடம் கையளிக்கும்போது அவர்கள் இதற்குப் பொறுப்புக் கூறுவார்களா என்பது.

முதலாவது இதில் கையொப்பமிட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் பொறுப்புக்கூற வேண்டும். ஏன் என்றால் ஏற்கனவே தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியது ஒன்றாகவும் நடைமுறைகள் வேறாகவுமே கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகின்றன.. அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனங்களில் தடம் புரண்டது என்று சொல்லித்தான் கஜேந்திரகுமார் வெளியேறினார். சுரேஸ் வெளியேறினார், அதன் பின்னர் விக்னேஸ்வரன் வெளியேறினார்.

விக்னேஸ்வரன் வெளியேறிய பின்னர் துலக்கமாகச் சொன்னவர் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய பல விடயங்களில் இருந்து பிறழ்பட்டு விட்டதென்று. ஆகவே அப்படியெல்லாம் கூறிவிட்டுத் தற்போது பழைய தடத்திற்குப் போய்விட்டார்களா? அதாவது அதில் இருந்ததெல்லாம் பிறழவிட்டார்களோ அவற்றையெல்லாம் சீர்செய்து கொண்டு பழைய தடத்திற்குப் போய்விட்டார்கள். இனி அவர்கள் சொன்னபடி நடப்பார்கள் என்று நாங்கள் நம்புவதாக இருந்தால், இதற்குப் பொறுப்பு கூற வேண்டும். அதற்கு ஒரு பொறிமுறையும் வேண்டும்.

அதாவது இந்தக் கட்சிகள் எல்லாம் சொன்னதின் பிரகாரம் நடந்து கொள்வார்கள் என்பதற்கு ஒரு பொறிமுறை வேண்டும். இரண்டாவது இந்த ஆவணத்தைச் சிங்கள வேட்பாளர்கள் ஏற்கமாட்டார்கள்.

ஆவணத்தில் இன்னும் சில விடயங்கள் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும். அடிப்படைப் பிரச்சினையும் உடனடிப் பிரச்சினையும் பிரித்துக் காண்பிக்கப்பட்டிருக்க வேண்டும். முதலாவது பந்தி அடிப்படைப் பிரச்சினையைக் கூடுதலாகக் கதைக்கிறது. அதன் பின்னர் வரும் பந்திகள் உடனடி பிரச்சினைகளைக் கதைக்கிறது.

தமிழ்ததேசிய மக்கள் முன்னணி சில வினாக்களை எழுப்பியதால்தான், இந்த ஆவணம் திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டு இப்படியொரு இறுக்கமான கொள்கை ரீதியாக விட்டுக்கொடுப்பற்ற ஒரு நிலைப்பாட்டுக்கு அந்த முதல் பந்தி கொண்டுவரப்பட்டது. அப்படிப் பார்த்தால் அதற்கான பெரும்பான்மைப் பாரட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத்தான் சேரும்

ஆகவே அடிப்படைப் பிரச்சினைகளைத் தெளிவாகத் தலையங்கம் போட்டுப் பிரித்துவிட்டுப் பின்னர் உடனடிப் பிரச்சினைகளை வேறாக வ்கைப்படுத்தி இருக்க வேண்டும். அப்படிப் பிரித்துவிட்டு உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதற்கு ஒரு பொறிமுறை, அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு பேச்சுவார்த்தைப் பொறிமுறை என்று தெளிவாகச் சொல்லியிருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இருந்தாலும் இதைக் கொண்டுபோய் வேட்பாளர் முன்னிலையில் வைக்கும்போது அடிப்படைப் பிரச்சினைத் தீர்வுக்கு எந்தவொரு வேட்பாளரும் அது குறித்துப் பேச வரமாட்டார்கள். இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது கூட்டமைப்பின் தரப்பில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

அதாவது இந்த ஆவணத்தில் உள்ள கோரிக்கைகளை அறுபது வீதத்துக்குக் குறையாமல் ஏற்பவர்களோடு நாங்கள் பேசலாமா அவர்களோடு ஒரு உடன்பாட்டுக்குப் போகலாமா என்று. அப்படி அறுபது வீத கோரிக்கைகளை அவர்கள் ஒப்புக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அப்படி அறுபது வீத கோரிக்கைகளை அவர்கள் ஒப்புக்கொண்டால் கூட அநேகமாக உடனடிப் பிரச்சினைகள் சம்மந்தப்பட்டதாகவே இருக்கும்.

ஆனால் அந்த உடனடிப் பிரச்சினைகளிலேயே கூட அவர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக ரணில்- மைத்திரி கூட்டு அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை. அப்படிப் பார்த்தால் அதற்கும் ஒரு பொறிமுறை வேண்டும். அந்தப் பொறிமுறை எப்படி இருக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட வேட்பாளர் வரவேண்டும் வரக்கூடாது என்று விரும்புகிற பெரிய நாடுகளோடு ஒரு பேச்சுவார்த்தை செய்யப்பட வேண்டும்.

பெரிய நாடுகள் மத்தியஸ்த்தம் வகிக்கவோ அல்லது ஏதாவது ஒரு கண்காணிப்புப் பொறிமுறையை வகுக்கவோ தயாராக இருக்க வேண்டும். அந்த நாடுகளைக் கொண்டு ஏதோவொரு பொறிமுறையை ஏற்படுத்தினால் மாத்திரமே ஒப்புக்கொள்ளப்பட்டவற்றைக் கூட நிறைவேற்றலாம். ஆனால் அங்கேயும் பிரச்சினை இருக்கிறது.

ஆவணம் அடிப்படைப் பிரச்சினையையும் உடனடிப் பிரச்சினையையும் பிரித்துக் காட்டியிருந்தால், நான் நினைக்கிறேன் இந்த வேட்பாளர்கள் அறுபதோ ஐம்பதோ நிறைவேற்ற ஒப்புக் கொண்டாலும் கூட அவர்கள் பின்னுக்கு வருகிற உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒப்புக்கொள்வார்களே தவிர, அடிப்படைப் பிரச்சினைகளில் பிரதான மூன்று சிங்கள வேட்பாளர்களும் ஒத்துவரமாட்டார்கள். அப்படி ஒத்துவந்தால் அவர்கள் தென்னிலங்கையில் தோற்கடிக்கப்படுவார்கள்.

ஐக்கியத்தை முன்வைத்தே பல்கலைக்கழக மாணவர்களும் களமிறங்கினர். ஆனால் அந்த ஐக்கியம் முழுமையாக எட்டப்படவில்லை. ஏனென்று சொன்னால் ஒரு கட்சி வெளியே போய்விட்டது. எனவே நான் மாணவர்களிடம் கேட்டேன் அந்த ஐக்கியத்துக்காக வேண்டி அந்த ஒரு சொல்லைப் போட்டிருக்கலாமே என்று. ஒரு வரிக்காக நாங்கள் ஐக்கியத்தை இழக்க முடியாது

கேள்வி- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்தக் கலந்துரையாடலில் இருந்து வெளியேறியுள்ளது. அவ்வாறு வெளியேறியமை நியாயமாகத் தெரிகின்றதா?

பதில்- அது அந்தக் கட்சியின் நிலைப்பாடு ஒரு கட்சிக்குத் தனது நிலைப்பாட்டை அழுத்திக் கூறி வெளியேற உரிமை உண்டு. ஜனநாயகப் பரப்பில் அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது. ஆனால் பொதுவெளியில் அது தொடர்பான விமர்சனங்கள் உண்டு என்பதை நாம் பேசிக்கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தனது நிலைப்பாடு சரி என்பதை நிரூபிப்பதற்கு ஒரு தேர்தல் வருகின்றது. எடுத்த நிலைப்பாடு சரி என்பதை அந்தத் தேர்தலில் அவர்கள் நிரூபித்துக்காட்ட வேண்டும்.

ஏனென்றால் எங்களிடம் இருக்கும் எல்லாக் கட்சிகளுமே தேர்தல் மையக் கட்சிகள்தான். எங்களிடம் மக்கள் இயக்கம் இல்லை. மக்கள் இயக்கம் இருந்தால் மக்களை ஒன்று திரட்டி தெருவுக்குக் கொண்டு வருவது வேறு கதை. ஆனால் இப்போது இருக்கிற எல்லாமே தேர்தல் மையக் கட்சிகள்தான். எனவே எங்களுக்கு இருக்கும் ஒரு பரீட்சைக்களம் தேர்தல் களம்தான்.

எனவே தேர்தல் களத்தில் தங்கள் இலட்சியம் மக்கள் மயப்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள் என்பதனை இந்தக் கட்சி நிரூபித்துக் காட்ட வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் அவர்கள் பகிஸ்கரிப்பது என்ற நிலைப்பாட்டுக்குக் கிட்ட வருகிறார்கள். சரி அப்படியென்றால் அவர்கள் பகிஸ்கரித்துக் காட்ட வேண்டும். மக்கள் மனதில் பகிஸ்கரிப்புப் பற்றிய ஒரு சரியான நிலைப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

ஏனென்றால் பகிஸ்கரிப்பு என்பது தமிழ் மரபில் ஏற்கனவே உள்ளது. ஹன்டிப் பேரின்பநாயகத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் சரி பிழை என்ற வாதத்தை பின்னர் வைத்துக்கொள்வோம். ஆனால் பகிஸ்கரிப்பு என்பது ஒரு அறிக்கையும் அல்ல, பத்திரிகையாளர் மாநாட்டில் கூறப்படுகின்ற கருத்துமல்ல. இதற்கும் அப்பால் பகிஸ்கரிப்பு என்பது ஒரு மக்கள் இயக்கம். அதற்காக மக்கள் மத்தியில் இறங்கி வேலை செய்ய வேண்டும். பட்டிதொட்டி எங்கும் போக வேண்டும்.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான் தமிழ்ப் பேரம். அதற்கும் அப்பால் பகிஸ்கரிப்புக்குப் போக வேண்டியிருக்கும். ஆனால் பகிஸ்கரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். தேர்தலை நிராகரிக்கின்றோம் என்ற எதிர்மறையான கருத்தை உலகத்துக்குக் கொடுக்கக் கூடாது. ஆகவே அதனை மக்கள் மயப்பட்ட முடிவாக மாற்ற வேண்டும்

விடியற்காலை எழுந்து திருநூற்றையும் அப்பிக்கொண்டு கோயிலுக்குப் போறது மாதிரி வாக்குச் சாவடிக்குப் போகிற முதியோர்களின் மனதில், இது எங்கட தேர்தல் அல்ல. இதைப் பகிஸ்கரிப்பதன் மூலமே ஒரு செய்தியைத் தென்னிலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கலாம் என்பதனைத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆழமாகச் சொல்ல வேண்டும்.

தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தங்கள் நிலைப்பாட்டை வெற்றிபெறச் செய்வார்களாக இருந்தால் அது நல்லது. அதுவும் ஒரு உரிமை.

கேள்வி- இலங்கை அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்புக்கான வரைபு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது. ஆகவே அந்த வரைபை நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கேட்டிருந்து. அத்துடன் இந்த ஆவணத்தில் முதல் பந்தியில் உள்ள கோரிக்கையில் ஒற்றையாட்சி நிராகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகவே புதிய வரைபு ஒற்றையாட்சித் தன்மை கொண்டது எனக் குறிப்பிட்டு நிராகரித்திருக்கலாம்தானே?

பதில்- என்ன பிரச்சினையென்றால் பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த அந்த முதலாவது பந்தி தமிழ் மக்களின் இலக்கைச் சொல்கிறது. அது இவர்கள் சொல்லுகின்ற மழுப்பலாக ஏற்றுக்கொள்கின்ற இடைக்கால வரைபை நிராகரிக்கிறது. அந்த இடைக்கால வரைபை நிராகரிக்கும் வகையில்தான் அந்த முதலாவது பந்தி அமைந்துள்ளது. எனவே அந்த முதலாவது பந்திக்குள் அதற்கான விடை உள்ளது.

ஆனால் இடைக்கால வரைபை நிராகரிப்பது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானது. ஏனெனில் கூட்டமைப்பின் முயற்சிதான் அந்த இடைக்கால வரைபு. இதனால் இடைக்கால வரைபை நிராகரிக்க வேண்டும் என்ற கருத்தை கூட்டமைப்பு ஏற்க மறுத்தது. ஆனாலும் அதனை பின் இணைப்பாக இணைத்திருக்கலாம்.

ஏனென்றால் ரணில் விக்கிரமசிங்க கொண்டு வந்து மைத்திரிபால சிறிசேனவினால் தோற்கடிக்கப்பட்ட அந்த இடைக்கால வரைபிலும் கூட இன்ன இன்ன கட்சி இப்படிச் சொல்கிறது என்ற ஒரு இணைப்பு இருந்தது. இது உலகத்தில் ஒரு வழமை. இது பற்றி நான் பல்கலைக்கழக மாணவர்களுடன் பேசினேன். அவர்கள் சொன்னார்கள் அதை இணைப்பதற்கு ஏனைய கட்சிகள் தயாராக இல்லையென்று.

இரண்டு அடிப்படைப் பிரச்சினைகள் உண்டு. ஒன்று பொறுப்புக் கூறல். அதாவது இதற்குச் சம்மந்தப்பட்ட ஐந்து தமிழ்க் கட்சிகளும் பொறுப்பாக இருக்குமா என்பது. இரண்டாவது இந்த ஆவணத்தை சிங்கள வேட்பாளர்களிடம் கையளிக்கும்போது அவர்கள் இதற்குப் பொறுப்புக் கூறுவார்களா என்பது

நான் திருப்பிக் கேட்டேன் பேரவை நியமித்ததும் பல்கலைக்கழக மாணவர்களுடையதும் முதன்மை நோக்கம் ஐக்கியம் (Solidarity) அதாவது இது ஜனாதிபதித் தேர்தலுக்கானதுதான். ஏனைய தேர்தலுக்கென்று பின்னர் கொள்கை வடிவில் சரியாக எழுதப்பட வேண்டும். இது ஜனாதிபதித் தேர்தலுக்கான ஓர் ஒருமைப்பாடு.

இதில் தமிழ் தரப்பு செய்தி துலக்கமாக வரவேண்டும். பொதுத் தேர்தலில் அப்படி வரும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் பொதுத் தேர்தலில் கட்சி நலன்கள் மாறுபடும். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் மறைமுக சர்வஜன வாக்கெடுப்பாக நடத்தப் போகிறோம் என்றால் அந்தத் தமிழ் ஐக்கியம் என்பது முக்கியம். அந்த நல் ஆதரவு என்பதை முன்வைத்தே பேரவை அமைத்த குழுவும் இயங்கியது.

அப்படிப் பார்த்தால் இந்த ஐக்கியம் முழுமையாக எட்டப்படவில்லை. அதேபோன்று ஐக்கியத்தை முன்வைத்தே பல்கலைக்கழக மாணவர்களும் களமிறங்கினர். ஆனால் அந்த ஐக்கியம் முழுமையாக எட்டப்படவில்லை. ஏனென்று சொன்னால் ஒரு கட்சி வெளியே போய்விட்டது. எனவே நான் மாணவர்களிடம் கேட்டேன் அந்தத் ஐக்கியத்துக்காக வேண்டி அந்த ஒரு சொல்லைப் போட்டிருக்கலாமே என்று. ஒரு வரிக்காக நாங்கள் ஐக்கியத்தை இழக்க முடியாது.

அதை ஏன் அந்த இடத்தில் நீங்கள் விவாதிக்கவில்லை என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள் ஏனைய கட்சிகள் அதில் பிடிவாதமாக இருந்தது என்று. அதனைப் போட வேண்டாமென்றும் பெரும்பான்மையினர் அந்த வரியை நீக்கிவிட்டு வரவேண்டும் எனவும் விரும்பினார்கள். எனவே தடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் சொன்னார்கள்.

அத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் ஐக்கியத்துக்காகப் பல இடங்களில் விட்டுக்கொடுக்கவில்லை என்ற தொனியும் மாணவர்களிடம் இருந்து வந்தது. ஆனால் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு விடயத்தை ஒப்புக்கொள்கிறார்கள், இன்றைக்கு இந்த ஆவணத்தில் தமிழ் மக்களின் இறுதி இலக்குத் தொடர்பாக மிகத் தெளிவான விடயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு முதற் காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிதான் என்று

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி சில வினாக்களை எழுப்பியதால்தான் இந்த ஆவணம் திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டு இப்படியொரு இறுக்கமான கொள்கை ரீதியாக விட்டுக்கொடுப்பற்ற ஒரு நிலைப்பாட்டுக்கு அந்த முதல் பந்தி வந்தது. அப்படிப் பார்த்தால் அதற்கான பெரும்பான்மைப் பாராட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத்தான் சேரும்.

கேள்வி- சிவில் செயற்பாட்டாளரான நீங்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் பொறுப்பு உள்ளது என்ற அடிப்படையில் மீண்டுமொரு பேச்சை நடத்தி மீண்டும் அவர்களை இணைக்கக் கூடிய வாய்ப்புகள் ஏதுவும் உங்களுக்கு இருக்கின்றதா?

புதில்- நாங்கள் தமிழ் மக்கள் பேரவை நியமித்த குழுவில் இயங்கினோம். எங்களுக்குத் தெரியும் இது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்று பொதுவேட்பாளரைக் கண்டுபிடிப்பதில் இருந்த அடிப்படைப் பிரச்சினை எங்களுக்குத் தெரியும். ஆனால் பொது வேட்பாளர் பற்றிய ஒரு விழிப்பை ஏற்படுத்துவதற்கு தமிழ் பேரம் ஒன்றை இதில் வைக்க வேண்டும்.

சர்வஜன வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தமிழ்ப் பேரத்தைத் துலக்கமாக வெளிப்படுத்துவது என்று சொன்னால் பொது வேட்பாளர் தெரிவுதான் சரி. ஆனால் அந்தத் தெரிவு அடிப்பட்டுப் போய்விட்டது. அந்தத் தெரிவு இன்று சிவாஜிலிங்கமாகச் சுருங்கி நிற்கிறது

பல்கலைக்கழக மாணவர்கள் சொல்கிறார்கள் தமிழ்ப் பேரம் என்று. தமிழ்ப் பேரம் என்ற கருத்தை அடைவதற்கு அதனைப் பரவலாக்குவதற்கு நாங்கள் கணிசமான அளவு உழைத்தோம். வெற்றியும் கண்டோம் இதனாலேதான் பேரவை நியமித்த குழு ஒரு கவனிப்பைப் பெற்றது. அதன் அடுத்த கட்டமாக அதன் தொடர்ச்சியாகவே மாணவர்களின் முயற்சி வருகின்றது.

நாங்களும் முயற்சி செய்தோம். ஆனால் அப்படி முயற்சித்துப் பேரவை நியமித்த குழுவினால் ஒரு கட்டத்திற்கு மேல் பொது வேட்பாளரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தப் பொதுவேட்பாளர் விடயத்தில் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தவும் முடியவில்லை. இதனால் பேரவை நியமித்த குழு ஒருகட்டத்தில் அமைதியாகிவிட்டது.

அவ்வாறு அமைதியான பின்னணிக்குள் பல்கலைக்கழகம் களமிறங்கியது. பல்கலைக்கழகம் என்னை அழைத்தார்கள். பேரவையின் குழுவின் சார்பாகவோ அல்லது தனிப்பட்ட கருத்துருவாக்கியாகவோ வரச்சொல்லிக் கேட்டார்கள். ஒரு தனிப்பட்ட கருத்துருவாக்கியாக நான் அதில் போயிருக்கலாம். ஆனால் போக விரும்பவில்லை. அதில் ஒரு தெளிவான காரணம் உண்டு. நான் அதை மாணவர்களுக்குச் சொன்னேன்.

ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான் தமிழ்ப் பேரம். அதற்கும் அ்ப்பால் பகிஸ்கரிப்புக்குப் போக வேண்டியிருக்கும். ஆனால் பகிஸ்கரிப்பை ஒரு மக்கள் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். தேர்தலை நிராகரிக்கின்றோம் என்ற எதிர்மறையான கருத்தை உலகத்துக்குக் கொடுக்கக் கூடாது. ஆகவே அதனை மக்கள் மயப்பட்ட முடிவாக மாற்ற வேண்டும்.

அப்படி மாற்றுவதில் இருக்கக் கூடிய வரையறைகளைக் கொண்டுதான், நான் சொன்னேன் இதனை ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக நடத்துவதற்கு தமிழ்ப் பேரத்தைத் துலக்கமாக வெளிப்படுத்துவது என்று சொன்னால் பொது வேட்பாளர் தெரிவுதான் சரி. ஆனால் அந்தத் தெரிவு அடிப்பட்டுப் போய்விட்டது. அந்தத் தெரிவு இன்று சிவாஜிலிங்கமாகச் சுருங்கி நிற்கிறது. அப்படி சுருங்கி நிற்கும் பின்னணியில் அது அல்லாத ஒரு தெரிவு என்று பார்த்தால் பகிஸ்கரிப்புத் தான் வரும். ஆனால் பகிஸ்கரிப்பை நாங்கள் ஏற்கவில்லை.

ஏனென்றால் இரண்டுக்கும் நடுவில் ஒரு மங்கலாகத் (Gray) தெரிவுகள் குறையும். இரண்டுக்கும் நடுவில் வரக்கூடிய மங்கலான தெரிவுகள் வழு வழுத்தவையாகவும் நொழு நொழுத்தவைகளாகவும் இருக்கும். எனவே அப்படியொரு தெரிவை நோக்கிக் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆகவே இந்த விடயத்தில் நான் தலையிடமாட்டேன் என்று கூறினேன்.

சிவாஜலிங்கம் குறித்து நிலாந்தன் கூறிய சாதக பாதகக் கருத்துக்கள்

கேள்வி- இந்த இடத்திலே சிவாஜிலிங்கம் தன்னிச்சையாக போட்டியிடுகிறார் அல்லவா? ஆகவே அவரை ஒரு குறியீடாகக் கருதி பொதுவேட்பாளராக ஏற்று அவருக்கு வாக்களிக்கச் சொல்லாம் தானே? அத்துடன் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை எற்றுக் கொண்ட சிங்கள வேட்பாளர்களான பெத்தேகம நந்திமித்திர, நாமல் ராஜபக்ச போன்றவர்களுக்கு இரண்டாவது விருப்பு வாக்கைச் செலுத்துமாறு கோரலம்தானே?

புதில்- சிவாஜிலிங்கத்தைப் பரிசீலிக்க வேண்டியதொரு தேவை உள்ளது. அவருடைய கடந்தகாலச் செயற்பாடுகளை அவதானிக்கும் போதும் சாதகமான நிலைமை ஒன்று உண்டு. எல்லோரும் பயந்திருந்த காலத்தில் சிவாஜிலிங்கம் துணிச்சலோடு செயற்பட்ட ஒரு அரசியல்வாதி. நடமாடும் நினைகூரும் இயந்திரமாகவும் செயற்பட்டிருக்கிறார் பல நெருக்கடியான காலகட்டங்களில்.

ஓட்டோ ஒன்றில் வாழைத் தண்டையும் ஏற்றிக் கொண்டு ஒரு சுட்டி, எண்ணெய்யோடு போய் எதிர்பாராத இடத்தில் நின்று அவர் விளக்கேற்றிவிட்டுப் போவர். அப்படியெல்லாம் அவர் செய்திருக்கிறார். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கு வரும்போதெல்லாம். இவற்றை துலக்கமாக வெளிப்படுத்திய ஒரு அரசியல்வாதி. அப்படிப் பார்க்கும்போது சிவாஜிலிங்கத்துக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கின்றது.

சிவாஜி ஒரு நிறுவனமயப்பட்ட அனைத்துக் கட்சிகளாலும் அல்லது பெரும்பான்மைக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட பொறுப்புக் கூறும் பொறிமுறைக்குள் உட்படுவாராக இருந்தால் அவரைப் பொதுவேட்பாளராகப் பரிசீலிக்கலாம். முதலில் அவர் அதற்கு உடன்பட வேண்டும். கட்சிகள் உடன்பட வேண்டும்

அதேநேரம் அவருடைய அடிப்படைப் பலவீனங்களில் ஒன்று ஒரு தனியோட்டம் ஓடும் அரசியல்வாதி. அவர் ஒரு நிறுவனத்திற்குள் நின்று வேலை செய்யமாட்டார். கட்சிக்குள்ளேயே அவர் இல்லை. தமிழ் அரசியல் கைதிகளின் போராட்ட விடயங்களில் அவர்கள் சொன்னது ஒரு குழுவாகச் செயற்பட வேண்டும் என்று. ஆனால் சிவாஜிலிங்கம் என்ன செய்தார், கைதிகளின் பெற்றோர்களையும் அழைத்துக் கொண்டு ஆளுநரிடம் போய் விட்டார். அதேபோன்று போராட்டம் நடத்திய மாணவர்களையும் அழைத்துக் கொண்டு ஜனாதிபதியிடம் போய்விட்டார்.

ஆகவே சிவாஜிலிங்கத்திடம் உள்ள பலவீனமான விடயம் இந்தத் தனியோட்டம். அவர் அரசியலை ஒரு சாகசமாக முன்னெடுப்பவர். ஆனால் தன்னையொரு கதாநாயகனாகவும் அவர் காட்டிக்கொள்வதில்லை. பிரச்சினை என்னவென்று சொன்னால் இப்படியொரு கலவைதான் சிவாஜிலிங்கம். ஆகவே இவரைக் கொண்டு வந்து குறியீட்டுப் பொது வேட்பாளராக நிறுத்தும் எந்தத் தரப்பும் அவருடைய இப்படியான செயற்பாடுகளையும் பொறுப்பேற்க வேண்டும்.

சிவாஜி ஒரு நிறுவனமயப்பட்ட அனைத்துக் கட்சிகளாலும் அல்லது பெரும்பான்மைக் கட்சிகளால் உருவாக்கப்பட்ட பொறுப்புக் கூறும் பொறிமுறைக்குள் உட்படுவாராக இருந்தால் அவரைப் பொதுவேட்பாளராகப் பரிசீலிக்கலாம். முதலில் அவர் அதற்கு உடன்பட வேண்டும். கட்சிகள் உடன்பட வேண்டும். அப்படி உடன்படும் நிலையில் குறியீட்டு வேட்பாளராக சிவாஜிலிங்கத்தை நிறுத்தும்போது பல விடயங்களில் தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பு உண்டு.

ஏனென்று சொன்னால், பொதுவேட்பாளர் என்ற அந்த ஏற்பாடுதான் ஒப்பீட்டளவில் துலக்கமான பேரம். அதற்கு அடுத்ததாக இருக்கக் கூடிய தெரிவு பகிஸ்கரிப்புத் தான். இரண்டுக்கும் இடையில் இருக்கும் எல்லாத் தெரிவுகளுமே வழு வழுத்து. நொழு நொழுத்தது. இந்தத் தெரிவுகள் எதற்குள் போனாலும் எப்படியோ ஒரு சிங்கள வேட்பாளருக்குக் கிட்டத்தான் போய் நிற்க வேண்டி வரும். அதிலும் ஒரு எழுதப்பட்ட உடன்படிக்கைக்குப் போக முடியாது. கனவான் உடன்படிக்கைக்குப் (Gentlemen agreement) போக வேண்டும். அதிலும் கூட அவர்கள் (சிங்கள வேட்பாளர்கள்) கனவான்களாக ஒருபோதும் இருந்ததில்லை.

அப்படி இருக்கும்போது, பொதுவேட்பாளர் தெரிவுக்கும் பகிஸ்கரிப்புக்கும் இடையில் இருக்க கூடிய தெரிவுகள் மிகவும் அரிது. மங்கலானவை என்ற அடிப்படையில் தான் நாங்கள் ஒரு பொதுவேட்பாளரை வற்புறுத்தினோம். அப்படிப் பார்க்கும்போது சிவாஜிலிங்கத்தில் உள்ள பொதுவான அம்சங்களை ஆழமாகப் பரிசீலித்த பின்னர், சிவாஜிலிங்கமும் ஒரு பொது ஏற்பாட்டுக்குள் உடன்படுவாராக இருந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம்.