வடமாகாணம் கிளிநொச்சி

கரியாலை நாகபடுவான் தமிழ்க் கலவன் பாடசாலையின் அவலம்

உதவி செய்துமாறு ஆசரியர்கள், மாணவர்கள் அவசரக் கோரிக்கை
பதிப்பு: 2019 ஒக். 19 14:54
புலம்: கிளிநொச்சி. ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 20 13:08
main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#LKA
#tamil
#kilinochchi
இலங்கை ஒற்றையாட்சி அரசின் கல்வி அமைச்சு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கல்விச் செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகின்றபோதும் போரினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் அபவிருத்தி செய்யப்படுவதில்லையென பெற்றோர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். வடமாகாணம் கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லையென்றும் வளப்பற்றாக்குறை காணப்படுவதாகவும் பெற்றோர் ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஓர் பாடசாலைக்கு இருக்க வேண்டிய பல்வேறு பௌதீக வளங்களை குறித்த பாடசாலை இழந்துள்ளது. கிராமப்புற பாடசாலை என்பதால் புறக்கணிக்கப்பட்டுள்ளதா எனும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவிக்கின்றனர்
 

குறித்த பாடசாலையின் வகுப்பறைகள் தரம் பிரிக்கப்படாது காணப்படுகின்றன. தரப்பாள் கொண்டு குறித்த வகுப்பறைகள் தனித்தனியே பிரிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி்ப் பாடசாலை
கிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் இடிந்து விழும் நிலையில் உள்ள அதிபர் விடுதி. இங்குதான் ஆசிரியர்கள் தங்கியிருந்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர். கட்டடங்களுக்குள் மழை நீர் தேங்கி நிற்பதால் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்கக்கூடியவகையில் அவர்களின் இருக்கைகள், தளபாடங்கள் கற்றலிற்கு உகந்ததாகவோ, சுதந்திரமான கல்விக்கான வசதியாகவோ காணப்படவில்லையென பாடாசாலை அதிபர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இந்தப் பாடசாலையில் உள்ள நூலகமும் போதிய வசதிகளின்றிக் காணப்படுகின்றது. மாணவர்களுக்கு ஏற்ற நூல்கள், தளபாடங்கள் எதுவும் அங்கில்லை. மழையினால் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை கற்றலிற்கான வசதிகள் நூலகம், அழகியற்கூடம், கணணி அறை உள்ளிட்ட எவையும் இல்லையென மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த பாடசாலையில் விளையாட்டு துறையில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் பலர் கல்வி கற்கின்றனர். ஆனால்; அவர்களால் சாதனைகளை நிலைநாட்ட முடியவில்லை.

ஏனெனில் உடற்கல்வி ஆசிரியர் பாடசாலையில் இல்லை. விளையாட்டு மைதானமும் சீரின்றி காணப்படுகின்றது. வலயம் மற்றும் மாவட்டத்தில் முதல் நிலை பெற்ற மாணவி ஒருவர் மேற்கொண்டு முன்னேறுவதற்கு பாடசாலை பௌதீக வளமே கை கொடுக்கவில்லையெனப் பாடசாலை அதிபர் கூறுகின்றார்.

பல்வேறு துறைகளில் சாதிக்கக்கூடிய மாணவர்கள் இவ்வாறான வளப் பற்றாக்குறை காரணமாக மழுங்கடிக்கப்படுகின்றனரென பெற்றோர் ஆதங்கப்படுகின்றனர்.

குறித்த கிராமப்புற பாடசாலையில் கல்வி கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்கள் பெரும் சவால்களிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். பாடாசலை அதிபர் விடுதி பழமைவாய்ந்த கட்டடமாகும். ஆனால் அடிப்படை வசதிகள் எதுவும் அந்த விடுதியில் இல்லை. சேதமடைந்து காணப்படும் இந்த அதிபர் விடுதியில்தான் ஆசிரியர்கள் தங்கியிருந்து மாணவர்களுக்குக் கற்பிக்கின்றனர்.

மழை காரணமாக குறித்த கட்டடத்தில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகின்றது. பழைய கட்டடம் என்பதால் அது இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமையினால் தூர இடங்களில் இருந்து இங்கு கற்பிக்க வரும் பெண் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

இதேவேளை, குறித்த பாடசாலையின் பௌதீக வளங்கள் பற்றாக்குறை தொடர்பாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் விவசாய பெண்கள் குழுக்களால் விடயங்கள் ஆராயப்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதுவரை பௌதீக வளப் பற்றாக்குறைகளை தீர்க்க எவரும் முன்வரவில்லை என்பதை பாடசாலைச் சமூகம் தெரிவிக்கின்றது. இந்தப் பாடசாலையில் குறைகளை நிவர்த்தி செய்ய அனைத்து அதிகாரிகளும் முன்வர வேண்டுமென பழைய மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ் அரசியல் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பழைய மாணவர்கள் கேட்டுள்ளனர்.