கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட

மட்டக்களப்பு ஆண்டான்குளம், கட்டுமுறிவுக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை

பன்னிரண்டு ஆண்டுகள் சென்ற பின்னரும் அபிவிருத்தி செய்யப்படவில்லையெனக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஒக். 19 22:56
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஒக். 21 01:33
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#landgrab
#lka
#tamil
#genocide
#humanrights
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கிராமங்கள் அனைத்தும் கடந்தகாலப் போர் நடவடிக்கைகளின் போது மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இதில் எல்லைக்கிராமமான கட்டுமுறிவு கிராமத்தை முன்னேற்றுவதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஆட்சியாளர்கள் எவரும் கவனம் செலுத்தவில்லையென ஆலய தலைவர் தெய்வேந்திரன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கட்டுமுறிவுக் கிராம சேவகர் பிரிவில் வாழ்ந்த மக்கள் போரினால் பல தடவைகள் இடம்பெயர்ந்து தமது சொத்துக்களை இழந்துள்ளனர்.
 

2006ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் கடுமையான எறிகணை வீச்சுத் தாக்குதல் சம்பவத்தினால் முற்றுமுழுதாக இடம்பெயர்ந்தனர். எனினும், 2007ஆம் ஆண்டு வாகரையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

ஆனாலும் பன்னிரெண்டு வருடங்கள் கடந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஆண்டான்குளம் மற்றும் கட்டுமுறிவுக் கிராமத்திற்கு இதுவரையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையெனக் கட்டுமுறிவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவர் க.தெய்வேந்தின் தெரிவித்தார்.

மாவட்டத்தின் எல்லைக்கிராமம் மாற்றினத்தவர்களிடம் பறிபோகக் கூடாது என்பதற்காக மக்கள் மிகவும் கஷ்டங்களுக்கு முகம் கொடுத்து மீள்குடியேறியுள்ளனர்.

வாகரை புச்சாங்கேணி சந்தியிலிருந்து மேற்காக சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கட்டுமுறிவுக்குச் சீரான போக்குவரத்துப் பாதையில்லை. அயல் கிராமமான சிங்கபுர கிராமத்திலிருந்து சோமாவதி கிராமத்திற்கு செல்லும் காடுகளினூடாக செல்லும் வீதிக்கு கார்பெற் போட்டுக் கொடுத்துள்ளார்கள்.

ஆனால், இக்கிராமத்தில் வசிக்கும் 180க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு தேவை கருதியும் நோயினால் பாதிக்கப்படும் போதும் மிக நீண்ட தொலைவிலுள்ள வாகரை வைத்தியசாலைக்குச் செல்ல சீரான வீதியில்லை. இவ்வாறு அடிப்படை வதிகளின்றி வாழ்வதாக ஆலயத் தலைவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌத்தர்கள் வசிக்காத பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைத்துக் கொடுக்கும் இலங்கை அரசாங்கம் தமிழர்களின் எல்லைக் கிராமத்தைப் பாதுகாப்பதற்காக பொதுமக்களின் வழிபாட்டிற்காக கட்டப்பட்ட ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தை புனரமைப்புக்கான நிதி வழங்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

இந்துக் கலாச்சார அமைச்சு இருந்தும் இவ்வாறு பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள ஆலயங்களைப் புனரமைப்புச் செய்வதில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டு கட்டுமுறிவுக் குளத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 1972 ஆம் ஆண்டு நிறைவடைந்தன. 1970 ஆண்டுகளில் நெற்செய்கைகள் செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டது.

அந்தக் காலப்பகுதிகளில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயம் மக்களின் வழிபாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஓலைக் குடிசையில்தான் அந்த ஆலயம் அமைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் மக்களுடைய பங்களிப்போடு பின்னர் கற்களால் கட்டப்பட்டது. இலங்கை அரசாங்கத்தி்ன் இந்துக் கலாச்சார அமைச்சு சிறியளவு நிதியுதவி செய்திருந்தது. ஆனாலும் நிதியுதவி முழுமையாக வழங்கப்படாமையினால் இந்த ஆலயத்தைத் தொடர்ந்து கற்களால் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. இன்று வரை அப்படியேதான் இந்த ஆலயம் காணப்படுகின்றது.

2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரினால் இந்த ஆலயம் முற்றாகச் சேதமடைந்தது. ஆனாலும் தொடர்ந்தும் மக்கள் வழங்கிய உதவியால் சிறியளவில் மீண்டும் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. எனினும் இலங்கை அரசாங்கத்தின் உதவி இதுவரை கிடைக்கவில்லை.

மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்து உழைப்பவர்கள் ஆகவே அவர்களிடம் இருந்து தொடர்ந்து உதவிகளைப் பெறமுடியாத நிலையில் உள்ளது. வேறு ஆலயங்களுக்கு நிதியுதவி செய்யப்படுகின்றது. ஆனால் இந்தக் கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் ஆலயத்திற்கு எந்தவிதமான உதவிகளும் இல்லை என்று ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் தலைவர் க.தெய்வேந்தின் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். .