மத்திய மாகாணம்

கேகாலை எட்டியாந்தோட்டையில் பொது மக்கள் மீது தாக்குதல்

சொத்துக்களுக்கும் சேதம்- பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2019 நவ. 19 10:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 27 23:59
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#Humanrights
இலங்கையின் மத்திய மாகாணத்தில் மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியாந்தோட்ட பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத இளைஞர்கள் பலர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் யாருக்கு வாக்களிதீர்கள் எனக் கேட்டுத் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். நேற்றுத் திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பொதுமக்களின் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய இளைஞர் குழுக்கள் மதுபோதையில் இருந்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றர்.
 
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை நடத்தினர். காயமடைந்த பொதுமக்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் அச்சத்துடன் இருப்பதாக மலையகத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

யட்டியாந்தோட்ட
இலங்கையின் மத்திய மாகாணம் மலையகத் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கேகாலை மாவட்டத்தில் உள்ள யட்டியாந்தோட்ட பிரதேசத்தில் அடையாளம் தெரியாத குழுவினர் தாக்குதல் நடத்தியதால் அச்சமடைந்த மக்கள் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பாக ஒன்று கூடிநிற்பதைப் படத்தில் காணலாம்
கேகாலை மாவட்டம் தெரனியாகலைப் பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற்ற அன்றைய தினம் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தீர்கள் என்று கேட்டவாறே தாக்குதல் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, கண்டி ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாடத்தி்ல் ஈடுபட்ட குழு ஒன்று தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலினால் தமிழ் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் மடுல்கலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, தேர்தலுக்கு பின்னர் இடம்பெற்ற அனைத்து வன்முறை சம்பவங்கள் தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு அறிவிக்குமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச தெரிவித்துள்ளார்.

கட்சி ஆதரவாளர்களிடம் அவர் இவ்வாறு கூறியுள்ளார். அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அகிலவிராஜ் காரியவன்ச தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவும் பொலிஸாரிடம் பணித்துள்ளார்.