இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் பின்னரான சூழலில்

ஐந்து மாணவர்கள் கொலை வழக்கின் குற்றப் புலனாய்வுப் பணிப்பாளர் திடீர் இடமாற்றம்

8 தமிழர்களைக் கொலை செய்த மரண தண்டனைக் கைதிக்கும் மன்னிப்பு வழங்கத் திட்டம்- ஆனாலும் மறுப்பு
பதிப்பு: 2019 நவ. 21 22:00
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: நவ. 28 22:05
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#Humanrights
கொழும்பில் ஐந்து மாணவர்கள், உட்பட பதினொரு தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை, ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, றக்பி வீரர் தாஜுதீன் ஆகியேரின் கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாகக் கடமையாற்றி வந்த இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபயசேகர திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிறப்பித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மிக முக்கியமான கொலைக் குற்றங்கள் தொடர்பான விவகாரங்களை வெளிப்படுத்திய குற்றப் புலனாய்வாளரான ஷரனி அபயசேகர தெற்குப் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
இது திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றும் கொலைக் குற்றங்களை மூடி மறைக்கும் நோக்கில் செய்யப்பட்ட இடமாற்றம் எனவும் ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.

நீண்டகாலமாகக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் குற்றப் புலனாய்வாளராகக் கடமையாற்றிய ஷானி அபயசேகர, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் ஆம் திகதியில் இருந்து இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கைப் பொலிஸ் சேவையின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முக்கியமான பதவிகளை வகித்திருந்த ஷானி அபயசேகர, ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு தமிழர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட விடயத்தில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரண்ணாகொட தொடர்புபட்டிருந்ததை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சிறுவன் ஒருவன் உட்பட எட்டுத் தமிழர்களைக் கொன்ற வழக்கின் மரண தண்டனைக் கைதியான மேஜர் சுனில் ரத்னாயக்க ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் அமைப்பின் தலைவர் மேஜர் அஜித் பிரசன்ன சென்ற புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுனில் ரத்நாயக்கா விடுவிக்கப்படுவாரெனவும் விடுதலை செய்வதற்குரிய ஆவணங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

யாழ் மிருசுவில் பகுதியில் 2000 ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி எட்டுத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சிறைத் தண்டனை பெற்றுள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வேன் என்று தேர்தல் பிரச்சாரங்களின் போது கோட்டாபய ராஜபக்ச கூறியிருந்தார்.

இதேவேளை, யாழ் மிருசுவில் பகுதியில் தமிழர்கள் கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாய்க்குப் பொது மன்னிப்பு வழங்கப்படுவதற்கான உத்தரவு எதுவுமே கிடைக்கவில்லையென இலங்கைச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.