போதைப் பொருள் இறக்குமதிக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்

தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தை நிரந்தரமாகத் தங்க வைப்பதுதான் விஜயகலா மகேஸ்வரனின் நோக்கமா?

ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பேச்சுக்களை தவிர்க்குமாறு வலியுறுத்தல்
பதிப்பு: 2018 ஜூலை 03 16:27
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 03 22:12
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
அரசியல் கட்சிகளின் ஆதரவுகள் இன்றி போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள், போரினால் ஏற்பட்ட பக்க விளைவுகளுக்குத் தீர்வு வழங்குமாறு கோரி, 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் ஜனநாயக வழியில் போராடி வருகின்றனர். இந்த நிலையில், சிங்களப் பெரும்பான்மைக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், 30 வருட ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி உரையாற்றியுள்ளார். அதேவேளை யாழ்ப்பாணம் சுழிபுரத்தில ஆறு வயது மாணவி கொல்லப்பட்டதைக் கணடித்தும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் போதைப் பொருட்களை இறக்குமதி செய்வதை தடுக்குமாறு கோரியும் யாழ்ப்பாணம் காரைநகர், மன்னார் முருங்கன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவர்கள், பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில் முருங்கன் மருத்துவ மனைக்கு முன்பாக ஆரம்பமான பேரணி முருங்கன் பேரூந்து நிலையம் வரை சென்றது. பேரணிக்கு ஆதரவாக முருங்கன் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர் டெனீஸ்வரன் மாணவர்களிடம் இருந்து மகஜர் ஒன்றைப் பெற்றுக் கொண்டார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், போதைப் பொருள் இறக்குமதிக்கு காரணமாகும் அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெரும்பான்மை சிங்கள கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள், 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும் 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் தமது அரசியல் இருப்புக்காகப் பயன்படுத்திக் கொச்சைப்படுத்தக் கூடாது- அவதானிகள்.

அரசியல் கலப்பற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது அருட்தந்தையர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு, தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறும் குற்றச் செயல்களைத் தடுக்க இலங்கைப் பொலிஸார் நீதியாகச் செயற்படுவதில்லை என்று குறிப்பிட்டனர்.

அதேவேளை, போதைப்பொருள் தடுப்பு தேசிய வாரத்தை முன்னிட்டு காரைநகர் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

காரைநகர் பிரதேச செயலகத்தில் இருந்து, உதவித் திட்டமிடல் பணிப்பளர் வீ.சிவகுமார் தலைமையில் ஆரம்பமான இ்ந்தப் பேரணி காரைநகர் கதிர்வேலாயுதசுவாமி ஆலயம் வரை சென்று முடிவடைந்தது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனை இல்லை என்றும் ஆனால் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னரான சூழலில் போதைப் பொருள் பாவனை திட்டமிடப்பட்ட முறையில் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கூறியிருந்தார்.

விஜயகலா
யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கொழும்பில் இருந்து சென்ற அமைச்சர்களான திலக்மாரப்பன, வஜிர அபயவர்த்தன, மற்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருடன் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இருந்தபோது எடுக்கப்பட்ட படம். இலங்கை இராணுவத்தை வெளியேற்றிவிட்டு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், போதைப் பொருள் பாவனை உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்க முடியும் என வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாசூக்காகப் பேசியிருந்தார். ஆனால் விஜயகலா மகேஸ்வரன் அர்த்தமற்ற முறையில் குழப்பிவிட்டார்.

30 வருட ஆயுதப் போராட்டத்தைப் புகழ்வதாக நினைத்துக் கொண்டு, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தற்போதைய அரசியல் சூழலை குழப்பியுள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தை மையப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினர்.

இந்த நிலையிலேதான், விடுதலைப் புலிகளின் மீள் வருகையை ஊக்குவிப்பதுதான் தமது நோக்கம் என்று வேறு அவா் கூறியுமுள்ளார்.

இதனால், இன்று செவ்வாய்க்கிழமை கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பங்களை விளைவித்தனர்.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதுதான் ஐக்கியதேசியக் கட்சியின் நிலைப்பாடா என்று மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிண்டலாகவும் கேள்வி எழுப்பினர்.

இந்தக் குழப்பங்களினால் இலங்கை நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை வரை ஒத்திவைக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

அதேவேளை, அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தேர்தலை நோக்கமாகக் கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் உசுப்பேத்தும் வார்த்தைகளைக் கூறி, இலங்கை இராணுவத்தை, தமிழர் தாயகத்தில் நிரந்தரமாக முகாம் அமைப்பதற்கு வழி ஏற்படுத்தியுள்ளார் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குவதே தமது நோக்கம் என அமைச்சர் விஜயகல மகேஸ்வரன் கூறியமை எந்த அடிப்படையில் என்றும் கேள்வி எழுப்பிய அவதானிகள், சில்லறைத் தனமான அரசியல் பேச்சுக்கள் மூலம், தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் மக்களின் நியாயமான போராட்டங்களை மலினப்படுத்துவதாக அமையும் என்றும் கூறியுள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஐநூறு நாட்களுக்கும் மேலாக நடத்தி வரும் கவனயீர்ப்பு போராட்டம், இலங்கைப் படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்கும் போராட்டம், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஆகியோரை விடுதலை செய்வது உள்ளிட்ட, 30 வருட போரின் பக்கவிளைவுகளில் இருந்து மீளுவதற்கான அனைத்துப் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி, திசை திருப்பும் நோக்கில், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரை நிகழ்த்தியுள்ளதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, கொழும்பை மையப்படுத்திய பெரும்பான்மை சிங்கள கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழ் உறுப்பினர்கள், தமிழ் மக்களின் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும் 30 ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் தமது அரசியல் இருப்புக்காகப் பயன்படுத்தி கொச்சைப்படுத்தாமல மக்களின் சுயமான ஜனநாயக போராட்டங்களுக்கு இடமளிக்க வேண்டும் என்றும் அவதானிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, இவ்வாறான சுய தேவைகள் கொண்ட அரசியல் பேச்சுக்கள் மூலம், தமிழர் தாயகத்தில் இலங்கை இராணுவத்தை நிரந்தரமாக தங்கவைப்பதுதான் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நோக்கமா என்றும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.