இலங்கையின்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித்- சபாநாயகருக்கு அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் ரணில்
பதிப்பு: 2019 டிச. 05 22:31
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 06 10:40
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#ranilwickremesinghe
#sajithpremadasa
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்துள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வியாழக்கிழமை கூடிய கட்சியின் நாடாளுமன்றக் குழு, எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதென தீர்மானித்துள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பாரென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச சபாநாயகர் கரு ஜயசூரியவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
 
இன்று மாலை அனுப்பியுள்ள கடிதத்தில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க கட்சியின் நாடாளுமன்றக் குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் நியமனத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரும் இழுபறி நிலை ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கடும் அழுத்தங்களைக் கொடுத்திருந்தனர்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தோல்வியடைந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.