வடக்குக் கிழக்கில்

அடைமழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்தனர்

கிளிநொச்சியில் இருபத்து இரண்டாயிரம்பேர் பாதிப்பு
பதிப்பு: 2019 டிச. 06 20:52
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: டிச. 08 03:32
main photo main photo main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#northeast
#weather
வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக மழை பெய்தமையினால் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி. மற்றும் மட்டக்களப்புப் பிரதேசங்களில் உள்ள தாழ்ந்த பகுதிகளில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்துள்ளனர். குறிப்பாகக் கிளிநொச்சி மாவட்டம் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியில் ஆறாயிரத்து 841 குடும்பங்களை சேர்ந்த இருபத்து இரண்டாயிரத்து 262 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு்ள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 920 குடும்பங்களை சேர்ந்த 2906 பேர் 21 பாதுகாப்பு அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றது. மாவட்டத்தில் 37 வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளதாகவும் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் மூவாயிரத்து 147 குடும்பங்களை சேர்ந்த பத்தாயிரத்து 220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனா். இவர்கள் ஆறு பாதுகாப்பான அமைவிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். 182 குடும்பங்களை சேர்ந்த 628 பேர் அவ்வாறு தங்கியுள்ளனா். 27 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில் மூவாயிரத்து 317 குடும்பங்களைச் சேர்ந்த பத்தாயிரத்து 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 பாதுகாப்பான அமைவிடங்களில் 714 குடும்பங்களை சேர்ந்த 2209 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இப்பிரதேசத்தில் 8 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் 252 குடும்பங்களை சேர்ந்த 731 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பான அமைவிடம் ஒன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவில் 125 குடும்பங்களை சேர்ந்த 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பான அமைவிடம் ஒன்றில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 64 போ் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 02 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்தப் புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

முகாம்களில் தங்கியுள்ள மக்களிற்கான சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்டவை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் பலர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இதேவேளை, சென்ற இரண்டாம் திகதி தொடக்கம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி வரையான காலப் பகுதி வரை தொடரும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 21 மாவட்டங்களில் 70 ஆயிரத்து 957 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து 35 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

பதுளை, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம், கேகாலை, இரத்தினபுரி, கண்டி, நுவரெலியா, மாத்தளை, அனுராதபுரதம், பொலன்னறுவை, புத்தளம், குருணாகல், அம்பாந்தோட்டை, மாத்தறை ஆகிய மாவட்டங்களே சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்தவ மத்திய நிலையம் கூறியுள்ளது.