கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் நிலாந்தனுக்கு அச்சுறுத்தல்

இரவில் வீட்டுக்குச் சென்று ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு உத்தரவு
பதிப்பு: 2020 ஜன. 03 21:43
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 01:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#journalist
கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்பட்டு வரும் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செல்வக்குமார் நிலாந்தன் கைது செய்யப்படலாமென ஒன்றியம் தெரிவித்துள்ளது. சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தனின் வீட்டிற்கு நேற்று இரவு ஒன்பது மணிக்கு அவரைக் கைது செய்யச் சென்ற இலங்கைப் பொலிஸார், அங்கு அவர் இல்லாததால் அவருடைய குடும்ப உறுப்பினர்களை அச்சுறுத்திச் சென்றுள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிலாந்தனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் பொலிஸார் குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளனர். இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்றமையினால் குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு உத்தரவிட்டபோதும் அதற்குரிய கடிதங்கள் எதுவும் குடும்ப உறுப்பினர்களிடம் கையளிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவுக் கடிதம் கூட கையளிக்கப்படாத நிலையில் எவ்வாறு பொலிஸ் நிலையத்திற்குச் செல்ல முடியுமென மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஒன்றியம் கேள்வி எழுப்பியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் அரச அதிகாரிகள் சிலர் கொழும்பு அரசியல் செவ்வாக்குடன் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்றமை அல்லது ஒத்துழைப்புச் செய்கின்றமை தொடர்பான பல விடயங்களை சுயாதீன ஊடகவியலாளர் நிலாந்தன் எழுதியதால் அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக இலங்கை அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊடக அடக்குமுறைகளைக் கண்டித்துக் கவனஈர்ப்புப் போராட்டம் சென்ற டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சிவில் சமூக அமைப்புகள், பொது மக்கள் ஒன்றிணைந்து, இந்தப் போராட்டத்தை நடத்தியிருந்த நிலையில் நிலாந்தனின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தை அச்சுறுத்தியுள்ளனர்.