வடமாகாணம்

கிளிநொச்சியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட ஐந்துபேர் கைது

பொலிஸார் விசாரணை
பதிப்பு: 2020 ஜன. 04 23:06
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 05 02:21
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் பொலிஸார், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறுவதாக மக்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். அதற்கு எதிராக போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன. பொலிஸார் அந்தப் போராட்டங்களை மிக மோசமாகத் தாக்கித் தடுத்துமிருந்தனர். இந்த நிலையில் சட்டவிரோத அகழ்வு முயற்சி தொடர்பாக இலங்கை இராணுவத்தில் கப்ரன் தரத்தைச் சேர்ந்த மூன்றுபேர், சாதாரண சிப்பாய்கள் அடங்கலாக ஐந்துபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 29ம் திகதி 155ம் கட்டை பகுதியில் இவர்கள் வேறு சிலருடன் இணைந்து சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
நீதிமன்ற அனுமதி இல்லாது மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பாக கிளிநொச்சிப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று சனிக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இரகசியமாக அகழ்வு மேற்கொள்ளப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செயலகங்கள் அமைந்திருந்த பகுதி என்றும் அந்தப் பகுதியில் இருந்து சமீபத்திலேயே படையினர் வெளியேறியிருந்ததாகவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கிளிநொச்சியில் மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தியதால் மண் அகழ்வு அனுமதியை கிளிநொச்சி மாவட்டச் செயலகம் தற்காலிகமாக ரத்துச் செய்திருந்தது. இந்த நிலையில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தங்கம் இருப்பதாகச் சந்தேகித்தும் சிலர் மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.