வடமாகாணம் மன்னார் மாவட்டத்தில்

காணாமல் ஆக்கப்பட்டவரின் தந்தை உயிரிழந்தார். இதுவரை 56 பேர் மரணம்

எங்கு முறையிட்டாலும் நீதி கிடைக்கவில்லையென உறவினர்கள் ஆதங்கம்
பதிப்பு: 2020 ஜன. 05 21:49
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 07 23:48
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டு இதுவரை கிடைக்காத நிலையில் நீதிகோரிப் போராடிய தந்தையொருவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார். வடக்குக்- கிழக்குத் தாயகப் பகுதிகளில் இடம்பெற்ற பல போராட்டங்களில் பங்கெடுத்துக், காணாமல் போன தனது மகனையும் ஏனைய பெற்றோர்களின் பிள்ளைகளைக், கணவன்மாரைக் கண்டறிந்து தருமாறு வலியுறுத்திக் குரல்கொடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். மன்னார் ஓலைதொடுவாய் பகுதியைச் சேர்ந்த 73 வயதான சூசைப்பிள்ளை இராசேந்திரம் என்பவரே உயிரிழந்தவராவார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் தனது மகனை மீட்கும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
 
இவரது மகன் இராசேந்திரம் அன்ரனி ரஞ்சன் 2008 ஆம் ஆண்டு மன்னார் ஓலைதொடுவாய் பகுதியில் வைத்து விசாரணைக்காக இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். ஆனால் பத்து ஆண்டுகள் சென்று விட்ட நிலையிலும் மகன் எங்கிருக்கிறார் என்பதை உயிரிழந்த தந்தை அறியவில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்ட இவருடைய மகனின் மனைவி தனது கணவரைத் தேடி பல இடங்களிலும் முறைப்பாடு செய்திருந்தார். ஆனாலும் எந்த இடத்திலிருந்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. அவ்வாறொருவர் கைது செய்யப்படவில்லையென இலங்கை இராணுவமும் மறுத்திருந்தது.

இலங்கை இராணுவம் அவரைக் காணாமல் ஆக்கிய நாளில் இருந்து தனது மகனைத் தேடி மகனின் மனைவியான தனது மருமகளுடன் இணைந்து நீதிகோரிய பல போராட்டங்களில் உயிரிழந்த இராசேந்திரம் ஈடுபட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட இவரது மகனின் மனைவி ஜெயக்குமாரி வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளராகவும் செயற்ப்பட்டு வருகின்றார்.

இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட நீதிகோரிய தொடர் போராட்டத்தில் பங்கெடுத்திருந்த 56 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.