2009 ஆம் ஆண்டுக்குப் பி்ன்னரான சூழலில்

இந்தியாவுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை வழங்கிய உறுதிமொழி? சுமந்திரன் கேள்வி

13 ஆவது திருத்தச்சட்டத்தின் முழுமை பற்றியும் வாக்குறுதி வழங்கப்பட்டிருந்ததாம் என்கிறார்
பதிப்பு: 2020 ஜன. 07 23:06
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 08 09:46
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
போரின் பின்னரான சூழலில் அதிகாரப் பரவலாக்கத்தின் மூலமாக தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் நிரந்தரத் தீர்வு வழங்கப்படுமென இந்திய மற்றும் சர்வதேச நாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறினார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன், இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது என்றும் கூறினார். அவற்றில் 13 ஆவது திருத்தமும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை அடையும் நோக்கில் 13ஆவது திருத்தச் சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
 
இலங்கை அரசியல் யாப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பது தேசிய மொழியிலான தமிழ் மொழியில் முழுமையான அமுலாக்கத்தினையும் உள்ளடக்குகின்றது.

ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத இலங்கைக்குள் தீர்வொன்றை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என்றும் சுமந்திரன் கூறினார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய சுமந்திரன் இனப்பிரச்சினைத் தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாக நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.

இலங்கைத் தமிழரசு கட்சி அல்லது பெடரல் கட்சி என அறியப்பட்ட கட்சி குடியுரிமைச் சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டமானது முதலாவது நாடாளுமன்றத்தில் ஏழு அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட எட்டு இலட்சம் மக்களின் வாக்குரிமையை இரத்து செய்திருந்தது.

பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற ரீதியிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது. மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் இல்லாமல் செய்தது என்றும் சுமந்திரன் விளக்கமளித்தார்.

சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசுக் கட்சி எம் இன அடிப்படையிலான ஒரு கட்சியாக உருவாகுவதற்கான தேவை உண்டாக்கியது என்பதை இந்த தென்பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. ஜனநாயகமானது தப்பித்துக்கொள்ளவும் செழிப்படையவும் வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்தக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று சுமந்திரன் கூறினார்.