கிழக்கு மாகாணம் திருகோணமலை

கன்னியா வெந்நீரூற்றில் தாதுகோபுரம் அமைக்கும் விவகாரம்- இடைக்காலத் தடையுத்தரவு மேலும் நீடிப்பு

வில்கம் விகாரை விகாராதிபதியை இடையீட்டு மனுதாரராக அனுமதிக்க நீதிபதி மறுப்பு
பதிப்பு: 2020 ஜன. 08 22:44
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 09 03:18
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் மரபுரிமைப் புனித பிரதேசமான கன்னியா வெந்நீரூற்றுத் தொடர்பான இடைக்காலத் தடையுத்தரவு எதிர்வரும் பெப்ரவரி 25 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேர விவாதத்தின் பின்னரே இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
 
மனுதாரர் சார்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர்கள் முன்னிலையாகியிருந்தனர்.

வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் புத்த தாதுக் கோபுரம் ஒன்றை அமைக்க முற்பட்டு சர்ச்சையை ஏற்படுத்திய வில்கம் விகாரை விகாராதிபதி சார்பில் எஸ்.புஞ்சிநிலம, ஏ.எஸ்.எம்.ரபீஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

கன்னியா வெந்நீரூற்று வழக்கில் இடையீட்டு மனுதாரர் தொடர்பாக இன்று விசாரணை இடம்பெற்றது. வில்கம் விகாரை விகாராதிபதி தானும் ஒரு இடையீட்டு மனுதாரராகத் தன்னை அனுமதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

ஆனால் சட்டத்தரணி சுமந்திரன் வில்கம் விகாரை விகாராதிபதிக்கு இதில் எந்தவித சட்டபூர்வமான உரித்தும் கிடையாது என நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எதிர்வரும் பெப்ரவரி பத்தாம் திகதிக்கு முன்னர் எழுத்து மூல ஆவணங்களை சமர்பிக்குமாறும், பெப்ரவரி 25 ஆம் திகதி இடையீட்டு மனுதாரர் தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படுமெனவும் கூறினார்.

ஈழத்தமிழ் மக்களின் மரபுரிமைப் புனித பிரதேசமான திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலயத்தை இடித்து அதில் புத்ததாது கோபுரத்தைக் கட்டுவதற்காக வில்கம் விகாரை விகாராதிபதி முற்பட்டிருந்தார்.

அதற்கு ஏற்ப இலங்கைத் தொல்பொருட் திணைக்களத்தின் ஒத்துழைப்பையும் தேரர் பெற்றிருந்தார். ஆனால் அதற்கு எதிராகத் தமிழ் மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையிலேயே குறித்த வில்கம் விகாரை விகாராதிபதிக்கும் அவருடைய செயற்பாடுகளுக்கும் எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்றத்தில் நம்பிக்கையில்லை என்றும் வில்கம் விகாரை விகாராதிபதிக்குக் கொழும்பு அரசியல் செல்வாக்கு உள்ளதாகவும் பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.