ஈரான். ஈராக் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால்

இலங்கையைக் கூட்டாளியாக்க அமெரிக்கா முயற்சி- ஜே.வி.பி எச்சரிக்கை

எந்தவொரு ஒப்பந்தமும் செய்யக் கூடாதென்றும் அறிவுறுத்தி கோட்டாபய ராஜபக்சவுக்குக் கடிதம்
பதிப்பு: 2020 ஜன. 09 21:42
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 10 03:01
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#JVP
அமெரிக்காவுடன் இலங்கை செய்துள்ள ஒப்பந்தங்களை ரத்துச் செய்ய வேண்டும் எனவும் வேறு ஒப்பந்தங்கள் எதனையும் செய்ய வேண்டாமெனவும் ஜே.பி.வி நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்ணாயக்கா, இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் போர் அதிகரித்ததன் காரணமாக இலங்கையின் பாதுகாப்பு பெரும் ஆபத்தில் உள்ளது என கருதுவதாகவும் மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரத்னாயக்க அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். எனவே தற்போதைய சூழலை கருத்திற்கொண்டு அச்சுறுத்தலான ஒப்பந்தங்களை உடனடியாக இரத்து செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
ஏற்கனவே அமெரிக்காவுடன் இலங்கை இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதனால் இலங்கைத் துறைமுகங்கள் விமான நிலையங்கள், எரிபொருள், தகவல் தொடர்புசாதனங்கள் ஆகிய வசதிகளை அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது என்றும் பிமல் ரட்ணாயக்கா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அதாவது 2007 ஆம் ஆண்டு செய்யப்பட்ட அக்சா ஒப்பந்தம் 2017 ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே சோபா ஒப்பந்தத்துக்கும் வழி வகுக்கும் என்றும் இது ஆபத்தானதெனவும் பிமல் ரட்ணாயக்கா தெரிவித்துள்ளார்.

ஈராக் அரசாங்கத்துடன் 2014 ஆம் ஆண்டு அமெரிக்க சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது என்றும் நிதியுதவி அளிக்கும் அந்த சோபா ஒப்பந்தத்தில் ஈராக் கையெழுத்திட்டதை அமெரிக்கா சாதகமாக பயன்படுத்தியுள்ளதென்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று, ஈரான் சிறப்பு இராணுவத் தளபதியை ஈராக்கில் வைத்துப் படுகொலை செய்ததன் மூலம் அமெரிக்கா ஈரானுக்கு எதிரான போரைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்கத் துருப்புக்கள் எந்த அறிவித்தலும் இன்றி சோபா ஒப்பந்தம் கைச்சாத்திட்ட நாட்டிற்குள் வருவதற்கும், அவர்களின் போர் விமானங்கள் மற்றும் பிற போர் உபகரணங்கள் மற்றும் அனைத்தையும் அந்த நாட்டில் பயன்படுத்த வழி ஏற்படுத்தக் கூடியது.

ஆகவே சோபா ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் அது ஆபத்தாக அமையும் என்று பிமல் ரட்ணாயக்கா அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். சோபா ஒப்பந்தத்தின் மூலமே ஈராக்கில் அமெரிக்கப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஈராக்கில் உள்ள வளங்கள், அதாவது இராணுவ தளங்கள் மற்றும் தரையில் உள்ள வசதிகள், ஈராக் தகவல் தொழில்னுட்ப வசதிகள் அனைத்தையும் அமெரிக்கா பெற அனுமதிக்கப்பட்டுள்ளது.

சோபா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒவ்வொரு நாடும் இந்தச் சவாலை எதிர்கொள்கின்றன, இ்ந்த ஒப்பந்தம் அமெரிக்காவினால் மேற்கொள்ளப்படும் சதி நடவடிக்கை ஆகும். அத்துடன் நாடுகளின் இறையாண்மையை இந்தச் சோபா ஒப்பந்தம் பாதிக்கின்றது.

ஈரான் இராணுவத் தளபதி ஈராக்கில் கொல்லப்பட்ட பின்னர் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென ஈரான் நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அங்கிருந்து வெளியேற அமெரிக்கா மறுத்துள்ளது.

அத்துடன் ஈரான் நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே அந்த அனுபவங்களின் அடிப்படையில் இலங்கை அமெரிக்காவுடன் சோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாதென்று பிமல் ரட்ணாயக்கா கூறியுள்ளார்.

ஈரான், ஈராக் பிராந்தியத்தில் தொடரும் யுத்த சூழ்நிலையினால், அமெரிக்கா இலங்கையைக் கூட்டாளியாக மாற்றுவதற்கான தெளிவான வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. எனவே அவதானமாகச் செயற்படுமாறு பிமல் ரட்ணாய்கா கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.