வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதியில்

சட்டவிரோத மண் அகழ்வைத் தடுக்க இலங்கை இராணுவம் தேவையென மக்கள் கோரினார்களா?

கிளிநொச்சி கண்டாவளை கல்லாறுப் பிரதேசத்தில் மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்
பதிப்பு: 2020 ஜன. 10 23:08
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 02:52
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்கள் இலங்கை இராணுவம், இலங்கைப் பொலிஸார் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இலங்கை இராணுவமே தேவையென கல்லாறு கிராமப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பொலிஸாரைவிட இலங்கை இராணுவத்தினரே சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுக்களைத் தடுப்பார்கள் எனவும் கிராமப் பெண்கள் கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
ஆனால் இலங்கை இராணுவத்தை தொடர்ச்சியாக நிலைகொள்ள வைக்கும் நோக்கில் கொழும்பில் உள்ள அரசியல் செல்வாக்கினால் திட்டமிடப்பட்ட முறையில் மக்களின் அச்சமான மன நிலையைப் பயன்படுத்தி இவ்வாறு கோரிக்கை விடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சிலர் கூறுகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை கல்லாறு கிராமத்தில் பெண்கள் ஒன்று கூடி ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்;. சட்டவிரோத மண் அகழ்வினால் தங்கள் கிராமம் மிகவும் ஆபத்தான நிலையை நோக்கிச் செல்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

சட்டவிரோத மண் அகழ்வுக்கு பொலிஸார் சிலரும் ஒத்துழைப்பு வழங்குவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் இலங்கை இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் சோதனைச் சாவடி ஒன்றை அமைத்தால் பாதுகாப்பாக இருக்குமென இலங்கை இராணுவத்துடன் இணைந்து செயற்படும் சிலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

அந்தக் கருத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கை இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்க வேண்டுமென கல்லாறு கிராமத்துப் பெண்கள் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பைப் பெண்கள் கோரவில்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இலங்கை இராணுவமே தேவையென கல்லாறு கிராமப் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தச் செய்தி தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் கட்சிப் பிரதிநிதிகள் கருத்து வெளியிட மறுத்துள்ளனர். வடக்குக்- கிழக்குப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தை நிலை கொள்ளவைக்கும் நோக்கிலேயே ஆயுதக்குழுக்களை உருவாக்கி இளைஞர்களிடையே வன்முறைகளை செயற்கையாக உருவாக்கிய கொழும்பு நிர்வாகம், பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி இராணுவத்தின் முகாம்களை நிரந்தரமாக அமைக்கத் திட்டமிடுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சமீபகாலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளும் இவ்வாறான ஒரு அணுகுமுறையெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.