கொழும்புக்கு வருகை தரவுள்ள அலிஸ் ஜீ வெல்ஸ்-

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்தம் குறித்து மீளாய்வு

ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
பதிப்பு: 2020 ஜன. 11 22:34
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 02:49
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#us
கொழும்புக்கு வருகைதரவுள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை உதவி செயலாளர் அலிஸ் ஜீ வெல்ஸ் (Alice G Wells) இலங்கையுடன் செய்யப்படவுள்ள அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்துடனான (Millennium Challenge Cooperation) (MCC) ஒப்பந்தம் குறித்தும் பேசவுள்ளதாகக் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது. 13 ஆம் திகதி திங்கட்கிழமை வருகைதரவுள்ள அவர் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தங்கியிருப்பார். ஈரான் நாட்டுடன் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமைகள் குறித்துப் பேசவுள்ளதுடன் இலங்கை மக்களின் மன நிலையையும் அலிஸ் ஜீ வெல்ஸ் அறிந்துகொள்ளவுள்ளார்.
 
அமெரிக்காவுடன் செய்யப்படவுள்ள MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் ஒப்பந்தம் தொடர்பாக ஆரம்பம் முதலே இலங்கையில் எதிர்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு ஒப்பந்தம் செய்யப்படமாட்டாதென்று கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார். ஜனாதிபதியாகப் பதியேற்ற பின்னரும் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

எனினும் இந்த ஒப்பந்தம் தொடர்பாக ஆராய்வதற்கு நான்குபேர் கொண்ட குழு ஒன்றை கோட்டாபய ராஜபக்ச நியமித்திருந்தார். இதனால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கான கால அவகாசத்தை அமெரிக்கா வழங்;கியிருந்தது. இந்த நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை கேள்வி எழுப்பியிருந்தார். இந்த ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லையென்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கொழும்புக்கு வரவுள்ள அமெரிக்காவின் உதவி செயலாளர் அலிஸ் ஜீ வெல்ஸ் இந்த ஒப்பந்தம் குறித்தும் பேசுவாரெனக் கொழும்பில் உள்ள தூதரக வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் உதவி செயலாளர் அலிஸ் ஜீ வெல்ஸின் கொழும்பு வருகை தொடர்பாக இலங்கை அரசாங்கம் எதுவுமே கூறவில்லை.

அதேவேளை, MCC எனப்படும் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு ஒப்பந்தம் செய்ய வேண்டாமென அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளும் கூறியுள்ளன. ஜே.வி.பியும் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.