மலையகத்தைச் சேர்ந்த

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவனைக் காணவில்லை

அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பதிப்பு: 2020 ஜன. 13 15:29
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 02:38
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#eastuniversity
#sl
கிழக்கு பல்கலைக்கழக இரண்டாம் வருட மருத்துவபீட மாணவன் காணாமல் போயுள்ளதாக மாணவனின் தந்தை அக்கரப்பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இலங்கையின் மலையகப் பிரதேசமான அக்கரப்பத்தனை கோல்புறுக் பகுதியைச் சேர்ந்த 21 வயதான சின்னத்தம்பி மோகன்ராஜ் என்ற மாணவனே காணாமல் போயுள்ளதாக அவருடைய தந்தை சின்னத்தம்பி முறைப்பாடு செய்துள்ளார். சென்ற பத்தாம் திகதி வெள்ளிக்கிழமை கோயிலுக்குச் செல்வதாக தன்னுடன் கல்விகற்கும் சக மாணவன் ஒருவருக்குக் கூறிவிட்டு பல்கலைக்கழக விடுதியில் இருந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று கிழக்கு பல்கலைக்கழகத்துக்குக் குறித்த மாணவர் சென்றிருந்தார். இந்த ஆண்டு இரண்டாம் வருடம் கல்வி கற்றுக் கொண்டிருந்தபோதே இவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக அக்கரப்பத்தனைப் பொலிஸார் மட்டக்களப்புப் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் காணாமல் போனமை தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவனுக்கு எந்தப் பிரச்சினைகளும் இல்லையென்றும் எனவே அவர் காணாமல் போவதற்கு எந்தக் காரணமும் இல்லையெனவும் பெற்றோர் கூறுகின்றனர். மாணவனின் கைத் தொலைபேசி இலக்கத்துக்கு இறுதியாகத் தொடர்பு கொண்டவர்களின் இலக்கங்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளதாக அக்கரப்பத்தனைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோல்புறுக் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றுப் பின்னர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.