மலையகத்தைச் சேர்ந்த

காணாமல் போயிருந்த கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு

தங்கள் மகன் கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் சந்தேகம்- சட்ட மருத்துவ விசாரணை ஆரம்பம்
பதிப்பு: 2020 ஜன. 14 22:26
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 15 22:20
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#east
#eastuniversity
#sl
நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல்போன கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் சின்னத்தம்பி மோகன்ராஜ் இன்று செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரையாக்கன்தீவுப் பகுதியில் மாணவனின் சடலம் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா மாவட்டம் அக்கரபத்தனை, ஹோல்புறுக் பகுதியைச் சேர்ந்த 21 வயதான மோகன்ராஜ், கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் பிள்ளையார் கோயிலடியில் உள்ள பல்கலைக்கழக விடுதியில் இருந்து இரவு உணவு அருந்துவதற்காகச் சென்று கொண்டிருந்தபோதே கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை காணாமல்போயிருந்தார்.
 
காணாமல் போன அன்றிரவே சக மாணவர்கள் பெற்றோருக்கு அறிவித்திருந்தனர். உடனடியாக அக்கரப்பத்தனைப் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். சென்ற நான்கு நாட்களாகத் தேடிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவனின் கையடக்கத் தொலைபேசியில் உரையாடப்பட்ட இலக்கங்களை அடிப்படையாகக் கொண்டே மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அருகாமையில் மாணவனின் தொலைபேசி இறுதியாக இயங்கியுள்ளமை கண்டறியப்பட்டது.

அத்துடன், கல்லடிப்பாலம், பல்கலைக்கழக விடுதி மற்றும் அதனூடான வீதிகளில் உள்ள சி.சி.ரி. கமராக் காட்சிகளும் பொலிஸாரால் ஆராயப்பட்டன. ஆனாலும் கரையாக்கன்தீவுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொதுமக்கள் வழங்கிய தகவலின் பின்னரே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது கொலையா தற்கொலையா எனப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தனிப் பொலிஸ் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தங்கள் மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாகவே பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த மாணவன் தற்கொலை செய்யுமளவுக்குப் பிரச்சினைகள் எதுவுமேயில்லை என்று சக மாணவர்களும் கூறுகின்றனர்.

என்ன காரணத்துக்காக மாணவன் காணாமல் போன நிலையில் உயிரிழந்தார் என்பது குறித்துச் சட்ட மருத்துவப் பிரிசோதளை இடம்பெறவுள்ளது. சடலம் தற்போது மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் அக்கரப்பத்தனை கோல்புறுக் தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் வரை கல்வி கற்றுப் பின்னர் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

சென்ற ஆண்டு ஓஸ்ட் மாதம் 23 ஆம் திகதி பூண்டுலோயா டன்சினேன் வடக்குப் பிரிவைச்சேர்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவன் துர்கேஷ்வரன் திடீரென உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.