உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் கைதாகி பிணையில் விடுதலையான

குருநாகல் மருத்துவமனை வைத்தியர் ஷாபி மீது மீண்டும் விசாரணை

சஹரான் குழுவுடன் தொடர்புள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிப்பு- ஆனால் ஷாபியின் சட்டத்தரணி மறுப்பு
பதிப்பு: 2020 ஜன. 16 22:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 17 15:13
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#muslims
இலங்கையில் ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஆரம்பத்தில் இருந்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சென்ற நவம்பர் மாதம் 16 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சிங்களக் கடும்போக்கு அமைப்புகள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த மே மாதம் 25 ஆம் திகதி கைது செய்யப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவப் பிரிவு வைத்தியர் முகமட் ஷரபி சிஹாப்தீன் குற்றமற்றவர் என்று குருநாகல் நீதிமன்றத்தில் பொலிஸாரால் கூறப்பட்டுப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
 
ஆனால் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் வைத்தியர் முகமட் ஷாபி சிஹாப்தீன் மீதான விசாரணைகளை ஆரம்பத்தில் இருந்து மீளவும் ஆரம்பிக்குமாறு இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு குருநாகல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குக் காரணமான சஹரான் குழுவுடன் தொடர்புடைய லாபீர் என்ற நபர், வைத்தியர் முகமட் ஷாபியோடு நின்று எடுத்த ஒளிப்படத்துடன் கூடிய இறுவெட்டு ஒன்றை இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் கையளித்துள்ளதாக கருத்தடை விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தாய்மார்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சாணக நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

சஹரான் குழு உறுப்பினர்களோடு நின்று படம் எடுத்த வைத்தியர் முகமட் ஷாபி எவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்றும் சட்டத்தரணி சாணக கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால் இதற்கு வைத்தியர் முகமட் ஷாபியின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டதரணி நவரட்ன பண்டார கடும் எதிர்ப்பு வெளியிட்டார். இந்த வழக்கு விசாரணை கருத்தடை விவகாரம் குறித்த தாய்மார்களின் வழக்கு. எனவே பாதிக்கப்பட்டோர் தாய்மாரா? சஹரானா என்று கேள்வி எழுப்பினார்.

இருதரப்பும் கடும் தொனியில் வாதாடிய பின்னர் விசாரணை திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எண்ணாயிரம் சிங்களப் பெண்களுக்குக் கருத்தடைச் சத்திர சிகிச்சை செய்து குழந்தை பிறக்கும் சக்தியை வைத்தியர் முகமட் ஷாபி இல்லாமல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் கருத்தடை சத்திர சிகிச்சைகள் செய்தமைக்கான ஆதாரங்கள் இல்லையென்றும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு குருநாகல் நீதிமன்றத்தில் அறிவித்திருந்தது. குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் பணிபுரியும் தாதியர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தன. கருத்தடை சத்திர சிகிச்சை செய்யப்படவில்லை என்று 69 தாதியர்களும் தமது வாக்குமூலத்தில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் வைத்தியர் முகமட் ஷாபிக்கு எதிராக மீண்டும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டமைக்கு மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் பாராட்டியுள்ளார்.