இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில்

சஜித் பிரேமதாச அணி ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகித் தனித்துப் போட்டியிடவுள்ளது.

கட்சியின் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க ரணில் தயாராக இல்லையென்கிறது சஜித் அணி
பதிப்பு: 2020 ஜன. 17 23:13
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜன. 20 00:24
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#ranilwickramasinghe
#sajithpremadasa
இலங்கை ஒற்றையாட்சி அரசில் அவ்வப்போது ஆட்சி அமைத்து வரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக கொழும்பு அரசியல்த் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டுவரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி குறித்து எதுவுமே பேச வேண்டாமென்று ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக கட்சியின் தலைமை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியிருந்தனர். ஆனாலும் எந்த இணக்கமும் ஏற்படவில்லை.
 
கட்சியின் 106 நாடாளுமன்ற உறுப்பினர்களின் 52 உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராக வர வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர். எழுத்து மூலமாகவும் கட்சியின் மத்திய குழுவுக்கும் அறிவித்துள்ளனர்.

எனினும் கட்சியின் தலைமைப் பதவி ரணில் விக்கிரமசிங்கவிடமே இருக்க வேண்டுமென கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணநாயக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்தப்பட்ட பேச்சுத் தோல்வியடைந்துள்ளதாக சஜித் பிரேமதமாசவுக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணி சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் அமைக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஏப்பிரல் 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி எந்தக் கட்சியோடும் கூட்டு அமைக்காமல் தனித்துப் போட்டியிடுமெனக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவன்ச தொிவித்துள்ளார்.

இந்த நிலையில் சஜித் பிரேமதாச அணி கட்சியில் இருந்து வெளியேறி மலையகத் தமிழ்க் கட்சிகள் முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட வேறு சிறிய கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகின்றது.