இந்தோ பசுபிக் பிராந்திய அரசியல்

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தோடு ஒப்பந்தம் கைச்சாத்தாகுமா?

இலங்கை வெளியுறவு அமைச்சு உயர்மட்ட அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளது
பதிப்பு: 2020 பெப். 01 22:32
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 01:08
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
#us
அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன (Millennium Challenge Cooperation) (MCC) ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கே இடமில்லையென்று ஸ்ரீலங்காப் பொதுஜனப் பெரமுனக் கட்சி ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின் போது கூறியிருந்தது. ஆனால் தற்போது அது குறித்த கலந்துரையாடல்கள் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணர்த்தன உள்ளிட்ட வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளோடு இடம்பெறுவதாகக் கூறப்படுகின்றது. அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இது தொடர்பாக வெளிப்படையாக மறுப்புத் தெரிவித்திருந்தாலும் உயர்மட்ட அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்திருப்பதாகவே உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தபோது இந்த ஒப்பந்தம் பற்றிய பேச்சுக்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தற்போதை அரசாங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சுத்திரக் கட்சி, ஜே.வி.பி உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்திருந்தன.

இவ்வாறன நிலையில் கோட்டாபய ராஜபக்ச இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது குறித்து ஆலோசித்து வருவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் இதுவரை அரசாங்கம் அதிகாரபூர்வமாக எதுவும் கூறவில்லை.

அதேவேளை, அமெரிக்காவின மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபன ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திடக் கூடாதென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்றுச் சனிக்கிழமை கொழும்பில் கூறியுள்ளார். ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு எதிராக மக்களை வீதிக்கு இறக்கிப் போராடப்போவதாகவும் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

இதேவேளை, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்தின் 480 மில்லியன் நிதியைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத் தாபனத்துடன் ஒப்பந்தம் செய்வது தொடர்பாக அரசாங்கம் இலங்கை வெளியுறவு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

இந்தக் குழு கூடி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பித்த பின்னரே அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதா இல்லையா என்று முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.