வடக்குக்- கிழக்குத் தாயகப் பிரதேசத்தில்

இராணுவத்தின் சோதனை நடவடிக்கை, ஏ-9 வீதியில் பயணிகள் அவதி

15 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் சோதனைச் சாவடிகள்
பதிப்பு: 2020 பெப். 03 22:21
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 01:03
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
வடக்குக் கிழக்குத் தாயகப் பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் சோதனை, தேடுதல் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வடக்கு மாகாணத்தில் ஏ-9 வீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கைகளினால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக முறையிடப்பட்டுள்ளது. ஆனையிறவு, மாங்குளம், புளியங்குளம், ஓமந்தை ஆகிய பகுதிகளில் இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுப் பேருந்துகள், பயணிகளிடத்தில் இராணுவத்தினர் சோதனை செய்கின்றனர். பயணிகள் பேருந்துகளில் பயணம் செய்தும் பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
 
போதைப் பொருள் கடத்தல்கள் இடம்பெறுவதாகக் கூறியே சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கைப் பொலிஸார் கூறினாலும் பயணிகளிடம் இராணுவத்தினர் சோதனை நடத்தும் முறை அவ்வாறானதாக இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

ஏ-9 வீதியில் உள்ள மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிக்கு அடுத்ததாக புதூர் சந்தியில் 15 கிலோமீற்றர் இடைவெளியில் மற்றொரு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சோதனைச் சாவடியின் பின்னர் 15கிலோமீற்றர் இடைவெளியில் ஓமந்தையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சோதனைச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் வழிமறிக்கப்படும் பேருந்துகளில் இருந்து இறக்கப்படும் பயணிகள் வரிசையில் நிற்க வைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

ஓவ்வொரு சோதனைச் சாவடியிலும் சுமார் 15 நிமிடத்திற்கும் அதிகமாக பயணிகள் தாமதிக்கப்படுகின்றனர். இதனால் அலுவலகங்களுக்குச் செல்லும் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இடையூறுகளை எதிர்கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறையிட்டுள்ளனர்.