வடமாகாணம்

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றம்- ஆனால் நாடாளுமன்றத்தில் மகிந்த மறுப்பு

எல் வலையக் காணிகளை பிரதேச சபையிடம் ஒப்படைக்க முடியுமா என்று சார்ளஸ் நிர்மலநாதன் கேள்வி
பதிப்பு: 2020 பெப். 06 10:21
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 07 00:54
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட எல் வலையத்தில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி வருகிக்றனர். இது தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்திடம் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆனால் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவ்வாறு சிங்களக் குடியேற்றங்கள் செய்யும் நோக்கம் இல்லையென்று கூறியுள்ளார். நேற்றுப் புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கேள்வி நேரத்தின்போது மகிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். சிங்களப் பிரதேசங்களை மைய்யப்படுத்திய மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழர் தாயகப் பகுதிகளைக் கூறுபோடும் நோக்கில் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கும் கொண்டு வரப்படுகின்றது.
 
மகாவலி எல் வலயத்தில் உள்ள தமிழர் நிலங்களை அபகரித்து அவற்றை சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பிரதேச செயலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை

போருக்கு முந்திய காலத்தில் அதாவது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் 1980களில் ஜே.ஆர் ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் இந்த மகாவலி அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இன்று வரை கொழும்பில் பதவிக்கு வரும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை விரிவுபடுத்தி அங்கு சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

1983 ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாற்றமடைந்த பின்னர் தமிழர் தாயகப் பிரதேசங்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மகாவலி அபிவிருத்தித் திட்டம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரியக் காணிகள் ஒதுக்கப்பட்டு ஏற்பாடு இடம்பெற்று வரும் நிலையில் மகிந்த ராஜபக்ச சிங்களக் குடியேற்றங்கள் எதுவுமே இடம்பெறாதென நாடாளுமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மகாவலி எல் வலயத்தில் தமிழ் மக்களின் எந்தவொரு காணியும் சிங்கள மக்களுக்கு மாற்றிக் கொடுக்கப்படவில்லை. இப்பகுதி காணிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்காக காணிக்கச்சேரியை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தபோதும் அதற்கான ஒரு விண்ணப்பம் கூடக்கிடைக்கவில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறுகிறார்.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்ட மகாவலி எல் வலய பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

மகாவலி எல் வலயத்தில் உள்ள தமிழர் நிலங்களை அபகரித்து அவற்றை சிங்கள மக்களுக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணிகளை பிரதேச செயலகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அது குறித்து எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை, இது குறித்து பிரதமர் கவனம் செலுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க முடியுமா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதிலளிக்கும்போதே, மகாவலி எல் வலயம் விசேட பகுதியாக வர்த்தமானிமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த பகுதியில் 648 ஏக்கர் நிலத்தில் தமிழ் விவசாயிகள் 160 பேரினால் விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த பகுதியில் சிங்கள மக்களுக்கு நிலங்கள் பங்கிடப்படவோ அல்லது சிங்கள விவசாயிகளை விவசாயம் செய்யவோ இடமளிக்கவில்லை. இந்த பகுதியில் நில உரிமையாளர்களை அடையாளப்படுத்தினால் இந்த பிரச்சினைகள் தோன்றாது என்பதை கருத்தில் கொண்டு இது குறித்து உரிய கச்சேரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களால் விவசாயம் செய்யப்பட்ட நிலங்கள் மகாவலி எல் வலயத்தில் இருந்தாலும் கூட அவை சிங்கள மக்களுக்கு கொடுக்கவில்லை. இது குறித்து பல சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மகாவலி எல் வலயத்தில் தமிழ் மக்களின் நிலங்கள் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அதற்கு பதிலாக மாற்று இடங்களை கொடுப்பது குறித்து பிரதேச சபையினூடாக ஏற்பாடுகளை செய்துகொடுக்க வேண்டும். அது சரியான நகர்வாக இருக்கும்.

இது குறித்து தமிழ் அரசியல் தரப்பினால் தொடர்ச்சியாக கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றே அறிவிக்கப்படுகின்றது.

எனினும் நாம் இவற்றை சரியாக கையாள முயற்சிக்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை நாம் ஏற்படுத்திக் கொடுப்போம். அதேபோல் மகாவலி எல் வலயத்தில் அரச நிலத்தில் ஒரு தொகுதி தமிழ் மக்களுக்கு கொடுக்க அவை துப்புரவு செய்யப்பட்டன.

இது 2019 ஆம் ஆண்டு இடம்பெற்றது, ஆனால் அதற்கான முறையான அங்கீகாரமும் எடுக்கப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டது. அது குறித்த வழக்கு நடக்கின்றது. அதனால் இது தற்காலிகமாக தடுக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இது குறித்து தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தும் இன்னமும் அது குறித்த வர்த்தமானி எதுவும் விடுக்கப்படவில்லை என்று மகிந்த ராஜபக்ச கூறினார்.

இதனையடுத்து எழுந்த சார்ள்ஸ் நிர்மலநாதன், தென் பகுதி மக்கள் குடியேறிய காணியை விடுத்து ஏனைய காணிகளின் உரிமத்தை மகாவலி எல் வலயத்தில் இருந்து பிரதேச சபையிடம் ஒப்படைக்க முடியுமா எனப் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டார்.

இதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதிலளிக்கையில், உங்களின் கோரிக்கை குறித்துநான் கவனம் செலுத்துவேன் என்றார்.