இலங்கை அரசாங்கம்

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரிடம் அறிக்கை கையளிக்க ஏற்பாடு

30/1 தீர்மானத்தில் இருந்து வெளியேறுவதா அல்லது மாற்று யோசனைகளா என்பது குறித்து எதுவுமே கூறவில்லை
பதிப்பு: 2020 பெப். 25 23:03
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: பெப். 25 23:27
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
#genocide
#humanrights
ஜெனீவாத் தீர்மானம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு நாளை புதன்கிழமை மனித உரிமைச் சபை அமர்வில் எடுத்துக் கூறப்படவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய புதிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மகிந்த ராஜபக்ச கொழும்பில் ஏற்கனவே அறவித்துள்ளார். ஆனாலும் அதிகாரபூர்வமாக வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளார். அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று ஜெனீவாவுக்குப் பயணமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
 
இதேவேளை, ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட முயற்சி என்றும் அந்த தீர்மானம் தொடர்பாக இலங்கை அமைச்சரவையின் அனுமதி பெறப்படவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட நாடாளுமன்றத்தில் திர்மானத்தின் பிரதி சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை எனவும் எனவே இலங்கை அரசியல் யாப்புக்கு முரணான எந்தவொரு சர்வதேச உடன்படிக்கைகள், தீர்மானங்கள் எதனையும் ஜனாதிபதி கேட்டாபய ராஜபக்ச ஏற்கமாட்டாரென்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.

கொழும்பில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, புதன்கிழமை ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கையின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று கூறினார்.

ஆனால் தீர்மானத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்பது குறித்து அறிவிக்கப்படுமென அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நேரடியாகக் கூறவில்லை. ஜெனீவாவுக்குச் செல்ல முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்திக்கவுள்ளதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கூறினார்.