நெருக்கடியான சூழலில் பேரிழப்பு

ஈழத் தமிழ் இலக்கிய முன்னோடி நீர்வை பொன்னையன் மறைவு- கொழும்புத் தமிழ்ச் சங்கம் அனுதாபம்

இடதுசாரிச் சிந்தனையுடையவர்- தமிழ்ச் சிறுகதைகள் பலவற்றின் சொந்தக்காரர்
பதிப்பு: 2020 மார்ச் 28 15:49
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 29 14:01
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#tamil
ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவரும் இடதுசாரிக் கொள்கைகளில் இறுக்கமான பிடிப்புக் கொண்டவருமான நீர்வை பொன்னையன் இயற்கை எய்தியமை ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு என்று கொழும்புத் தமிழச் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் நீர்வேலியைப் பிறப்பிடமாக கொண்ட அவர் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் ஈழத்துத் தமிழ் இலக்கிய பரப்பிலே தனது காலத்தைச் செலவழித்து, இயற்கை எய்தும் வரை எழுதிக் கொண்டிருந்தவரென்றும் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் வழங்கிய சாகித்திய ரத்தனா விருதைப் பெற்ற பெருமைக்குரியவர்.
 
பெரியாரை, சமூகச் சீர்திருத்தவாதியாக ஏற்றுக் கொண்டாலும் பெரியாரின் சில செயற்பாடுகளையும் நீர்வை பொன்னையன் விமர்சிக்கத் தவறவில்லை

சிறுகதை, நாட்டார் கதை, இலக்கியக் கட்டுரைகள் நாடகங்கள் என்று ஈழத் தமிழ் எழுத்துலகிற்குப் பல்வேறு படைப்புகளைத் தந்த நீர்வை பொன்னையன், தீவிர இடதுசாரிச் சிந்தனை கொண்டவராகவும் தன்னை அடையாளப்படுத்தியவரென்று சங்கத்தின் தலைவர் ஆ.குகமூர்த்தி வெளியிட்டுள்ள அனுதாபக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் நீண்ட உறவுவைக் கொண்ட நீர்வைப் பொன்னையன் தான் சேகரித்து வைத்திருந்த பெறுமதியான நூல்கள் அனைத்தையும் சங்கத்தின் நூலகத்துக்குச் சமீபத்தில் கையளித்திருந்தார்.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்துடன் இலக்கியத் தொடர்புகளைத் தன்னலம் கருதாது பேணி வந்த தமிழ் இலக்கிய உலகின் முன்னோடியான நீர்வைப் பொன்னையன், காலமாகவில்லை. காலம் ஆனார் என்று அந்த அனுதாபக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேடும் பள்ளமும் (1961), உதயம் (1970), மூவர் கதைகள் (1971), பாதை (1997), வேட்கை (2000), உலகத்து நாட்டார் கதைகள் (2001), முற்போக்கு இலக்கிய முன்னோடிகள் (2002), நாம் ஏன் எழுதுகின்றோம்? (2004), ஜென்மம் (2005), நிமிர்வு (2009) கால வெள்ளம் (2010), நினைவுகள் அழிவதில்லை (2013), உறவு (2014), பாஞ்சான் (2016) போன்ற இவரது இலக்கியப் படைப்புகள் ஈழத்து தமிழ் இலக்கியப் பரப்பில் பெரும் தாக்கத்தைச் செலுத்தி வருகின்றன.

இதனைவிட இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் நீர்வை பொன்னையனின் சிறுகதைகள் என்ற ஒரு தொகுப்பு 2007 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

1995-96-97 ஆம் ஆண்டுகளில் கொழும்பில் செயற்பட்ட விபவி மாற்றுக்கொள்கைக் கலாச்சார அமைப்பின் மூலம் பொதுவுடமைக் கருத்துக்களை பரப்புவதில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கை- இந்தியா ஆகிய நாடுகளில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் இடதுசாரிச் சிந்தனைகள் சீன- ரஷ்ய கம்யூனிஸ கோட்பாடுகளுடன் சேர்ந்திருந்தன. அதன் தாக்கம் ஈழத்து முற்போக்கு எழுத்தாழர்கள் மத்தியிலும் அன்று தோன்றியது. இலங்கையில் மாஸ்கோ சார்பு, பீக்கிங் சார்பு நிலைப்பாடுகளுடன் ட்ரொஸ்கிய நிலைப்பாடுகளும் வேரூன்றியிருந்தன. இந்தக் காலகட்டங்களில் நீர்வை பொன்னையன் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்திருந்தார்

1962 ஆம் ஆண்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து தனது இலக்கியப் பணியை முன்னெடுத்த நீர்வை பொன்னையன், கொழும்பு வெள்ளவத்தையில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் பால் நிலை சமத்துவம் தொடர்பான மாநாடுகள் பலவற்றில் கருத்துரை வழங்கியிருந்தார். அந்த நிலையத்தின் பல வெளியீடுகளில் ஆக்கங்களை எழுதியுமிருந்தார்.

பெரியாரை, சமூகச் சீர்திருத்தவாதியாக ஏற்றுக் கொண்டாலும் பெரியாரின் சில செயற்பாடுகளையும் நீர்வை பொன்னையன் விமர்சிக்கத் தவறவில்லை. 1996 ஆம் ஆண்டு பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் இடம்பெற்ற பெரியாரியம் என்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் துணிவோடு இந்தக் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர். 1947 ஆம் ஆண்டு இடதுசாரிச் சிந்தனைகளினால் கவரப்பட்ட நீர்வை, யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தம்மை இணைத்துக்கொண்டு பல போராட்டங்களிலும் பங்குபற்றியிருந்தார்.

அதேவேளை, தமிழர் தாயகமான வடமாகாணம் யாழ்ப்பாணம் நீர்வேலியில் 1930 ஆம் ஆண்டு பிறந்த நீர்வை பொன்னையன், தமது ஆரம்பக் கல்வியை நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் கற்றார். பின்னர் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா கல்லூரியில் பயின்று பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராகச் சம்மாந்துறை முஸ்லிம் பாடசாலையில் கடமையாற்றியிருந்தார். அதன் பின்னர் இந்தியாவில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டதாரியானார்.

இலங்கை- இந்தியா ஆகிய நாடுகளில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் இடதுசாரிச் சிந்தனைகள் சீன- ரஷ்ய கம்யூனிஸ கோட்பாடுகளுடன் சேர்ந்திருந்த காலம் ஒன்று இருந்தது. அதன் தாக்கம் ஈழத்து தமிழ் முற்போக்கு எழுத்தாழர்கள் மத்தியிலும் அன்று தோன்றியிருந்தது.

அதே காலப்பகுதியில் மாஸ்கோ சார்பு, பீஜிங் சார்பு நிலைப்பாடுகளுடன் ட்ரொஸ்கிய நிலைப்பாடுகளும் வேரூன்றியிருந்தன. இந்தக் கால கட்டங்களில் நீர்வை பொன்னையன் சீனச் சார்பு கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்திருந்தார். அந்த நிலைப்பாடுகளை முன்னெடுப்பதிலும் நீர்வை பென்னையன் ஈடுபட்டிருந்தார். ஆனாலும் இறுதியில் அந்த இயக்கத்திலும் பிளவுகள் உருவாகியிருந்தன.

அவ்வாறு பிளவுகள் உருவாகும் காலகட்டங்களில் நீர்வை பொன்னையன் தன்னை நிலைப்படுத்தித் தீவிர இடதுசாரித் தன்மையில் இருந்து விடுபடாது தொடர்ந்து தனது எழுத்துக்களிலும் அதன் வெளிப்பாட்டைக் காண்பித்திருந்தார்.

தற்போது வாழந்து கொண்டிருக்கும் செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா ஆகியோர் காலத்து எழுத்தாளர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.