கொரோனா வைரஸ் தாக்கம்

இலங்கையில் ஒருவர் உயிரிழந்தார்- 20 ஆயிரம் பேர் வாழும் பிரதேசம் சுற்றிவளைத்து மூடப்பட்டது

சீன அரசு இன்று சனிக்கிழமை மருந்துப் பொருட்களை அவசரமாக அனுப்பியது
பதிப்பு: 2020 மார்ச் 28 22:22
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: மார்ச் 28 23:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#coronavirus
இலங்கையின் மேல் மாகாணத்தில் உள்ள கொழும்பின் புநகர் பகுதியான களுத்துறை மாவட்டம் அட்டலுகம பிரதேசம் இலங்கைப் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்தப் பிரதேசத்தில் கொரோனா நோயளியொருவர் இனம் காணப்பட்டதையடுத்தே இந்தப் பிரதேசத்தில் இருந்து யாரும் வெளியே வர முடியாதென்றும் உள்ளே செல்ல அனுமதியில்லையெனவும் கொரோன விவகாரத்தைக் கண்காணிக்கும் இலங்கை இராணுவக் கேர்ணல் கமால் ஜயசூரி தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தைச் சுற்றி பொலிஸாரும் இராணுவத்தினரும் காவல் புரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
கொரோனர
இலங்கையில் முதலாவது கொரேனா வைரஸ் நோயாளியாக இனம் காணப்பட்ட ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். இத்தாலியர்களுக்கான சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி ஒருவரே வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகினார். அவர் குணமடைந்து வீடு திரும்ப முன்னர் வைத்தியர் தாதியர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட படம் இது. சீனப் பெண் ஒருவரும் குணமடைந்து தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.

ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரம் பேரைக் கொண்ட இந்தப் பிரதேசத்தில் கொரேனா தொற்றுள்ள நபருடன் நெருங்கிப் பழகிய 26 பேர் பிரத்தியேகமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனைய குடும்பங்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களுக்கான அத்தியாவசிய மற்றும் மருத்துவச் சேவைகள் வழங்கப்படுமென களுத்துறை மாவட்டச் செயலாளர் யு.டி.சி.ஜயலால் தெரிவித்துள்ளார். டுபாய் நாட்டுக்குச் சென்றிருந்த நபர் ஒருவர் சென்ற 19 ஆம் திகதி களுத்துறைக்குத் திரும்பிய நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அவருக்கு கொரேனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்தே இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் குறித்த பிரதேசம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜயலால் தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் அந்த கிராமத்தவர்களையும் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளதாகவும் ஜயலால் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுக் கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குருநகால் மாரவில பிரசேத்தைச் சேர்ந்த, ஏற்கனவே நீரழிவு நோயினால் சிறு நீரகம் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கே கொரோனர வைரஸ் தொற்றியதாகவும், அந்த நபரே இலங்கையில் இன்று உயிரிழந்த முதலாவது கொரேனா நோயாளியெனவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை எட்டு மணி நேரத்தி்ற்குள் மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானமை உறுதுிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்றுள்ள சந்தேகத்தில் 199 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனப் பெண் ஒருவர் உட்பட ஒன்பது பேர் குணமடைந்துள்ளனர். மேலும் பலர் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்றும் அவர்கள் ஒழிந்திருக்கலாமெனவும் இலங்கை மருத்துவச் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதையடுத்து சீனா இன்று சனிக்கிழமை விமானத்தின் மூலம் தேவையான மருந்துப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.

அவற்றில் ஐம்பதாயிரம் முகக் கவசங்கள், நோய்த்தடுப்பு அங்கிகள் ஆகியனவும் அடங்கியுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை மற்றுமொரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுமென கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே கொரேனா வைரஸ் தொற்றியிருந்த நோயாளியொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடுதிரும்பினார். சீனப் பெண் ஒருவரும் குணமடைந்து தாயகம் திரும்பியிருந்தார்.

இன்று சனிக்கிழமை எட்டாவது நாளாகவும் இலங்கைத் தீவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.