தமிழர் தாயகத்தில்

உள்ளூராட்சி சபைகளுக்குரிய மக்களின் பணத்தை இலங்கைப் படையினர் சுரண்டுவதாகக் குற்றச்சாட்டு

யாழ் வலி.மேற்கு பிரதேச சபையில் விவாதம், உண்மை வெளியானது
பதிப்பு: 2018 ஜூலை 11 23:01
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 12 18:15
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகப் பிரதேசமான யாழ்ப்பாணம் பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் மினி முகாம் அமைத்துள்ள இலங்கைக் கடற்படையினரின் மின் விநியோகத்திற்கான கட்டணம் வலி.மேற்குப் பிரதேச சபையால் செலுத்தப்பட்டு வருவதாக உறுப்பினர் ந.பொன்ராசா ஆதாரத்துடன் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கைப் படையினர் 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலத்திலும் உள்ளூராட்சி சபைகளுக்குரிய மக்களின் பணத்தில் இருந்து தமக்குத் தேவையான மின்சார மற்றும் நீர்க்கட்டணங்களை பெற்றதாக உறுப்பினர் சிவகுரு பாலகிருஸ்ணனும் கூறினார். பொதுமக்களின் பணத்தை இலங்கைப் படையினர் எந்த அடிப்படையில் பெறுகின்றனா் என்பது குறித்து சபையில் வாதப்பிரதி வாதம் ஏற்பட்டது.
 
இலங்கையின் முப்படையினருக்குமான செலவுகளுக்காக இலங்கை நாடாளுமன்றம் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் 29 ஆயிரம் கோடி ரூபாய்கள் வரை நிதி ஒதுக்கி வரும் வரும் நிலையில், பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் மினி முகாம் அமைத்துள்ள இலங்கைக் கடற்படையினரின் மின் விநியோகத்திற்கான கட்டணத்தை வலி.மேற்குப் பிரதேச சபை கடந்த 15 வருடமாக செலுத்தி வருகின்றமை தொடர்பாகவே சபையில் பெரும் வாதப்பிரதிவாதம் ஏற்பட்டது.

இலங்கைக் கடற்படையினருக்கு செலுத்தப்பட்ட ஏழு இலட்சம் ரூபாவையும் மீளப் பெற்றால் வலி.மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்க முடியும்- உறுப்பினர்கள்.

நேற்று செவ்வாய்க்கிழமை சபை கூடியபோது, சபையின் நிதியிடல் முறை குறித்த இந்த ஒழுங்குப் பிரச்சினையை உறுப்பினர் பொன்ராச முன்வைத்தார்.

ஒரு ரூபாய்க்குக் கூட கணக்குப் பார்க்க வேண்டிய நிதிக்கட்டமைப்பைக் கொண்டுள்ள வலி.மேற்குப் பிரதேச சபை, 2003ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை சுமார் ஏழு இலட்சம் வரை இலங்கைக் கடற்படைக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்தியுள்ளதாக பொன்ராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது எமது பிரதேச மக்களின் பணம். ஆகவே அந்தப் பணத்தை இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து மீளப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அன்று தொடக்கம் இன்றுவரை பதவியில் இருந்த ஒன்பது செயலாளர்களும் தவிசாளர் ஒருவரும் அறிந்திருந்தும் ஏன் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பொன்னாலை நீர் விநியோகத் திட்டத்திற்கு 2003 ஆம் ஆண்டு தொடக்கம் மின்சார விநியோகம் நடைபெற்றது. அன்றில் இருந்து இன்றுவரை இலங்கைக் கடற்படையினர் தண்ணீர் எடுப்பதற்கும் தமது மினி முகாம் பாவனைக்குமான மின்சாரக் கட்டணங்களையும் வலி.மேற்கு பிரதேச சபைக்குரிய மக்களின் நிதியில் இருந்து பெற்றுள்ளனர்.

2003 ஆம் ஆண்டில் இருந்து செயலாளர்களாக திருமதி ஜே.சோமராஜ், திருமதி பு.சிவலிங்கம், ஈ.ராஜதுரை, எஸ்.குமாரசாமி, கே.பாலசுப்பிரமணியம், எஸ்.புத்திசிகாமணி, திருமதி சா.உருத்திரசாம்பவசிவன், ஜி.சண்முகலிங்கம், எஸ்.சந்திரமௌலி ஆகியோரும் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த திருமதி நாகரஞ்சினி ஐங்கரனும் பணியாற்றியுள்ளனர்.

ஆனால் இலங்கைக் கடற்படைக்கு நிதி செலுத்தப்பட்டமை குறித்து அவர்கள் மௌனமாக இருந்துள்ளனர்.

பொன்னாலை
யாழ். பொன்னாலை நீர்விநியோகத் திட்டத்தில் இருந்து இலங்கைக் கடற்படையினருக்கு நீர் கொண்டு செல்லும் நீர்த்தாங்கி

தற்போது புதிய நீர் விநியோகத் தாங்கிக்கு தினமும் 10 ஆயிரம் லீற்றர் தண்ணீர் ஏற்றுவதற்கு மாதாந்தம் 850 ரூபாவுக்குள் மின் கட்டணம் வருகின்றது.

இலங்கைக் கடற்படையினர் வசமுள்ள பழைய நீர் விநியோகத் திட்டத்தில் உள்ள தாங்கிக்கு தினமும் 15 ஆயிரம் லீற்றர் தண்ணீரை ஏற்றுவதற்கு மாதாந்தம் 7 ஆயிரம் ரூபாவுக்கு மேல் மின்சாரக் கட்டமாக செலுத்தப்படுகின்றது.

இந்த வேறுபாட்டை செயலாளர்கள் ஏன் ஒப்பிட்டுப் பார்க்கவில்லை எனவும் பொன்ராச கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தற்போதைய செயலாளர் எஸ்.சந்திரமௌலி, 2017 ஆண்டு ஜீலை முதலாம் திகதியே தான் புதிதாகப் பதவியேற்றதாகவும் கடற்படைக்கு எவ்வாறு மின்சார விநியோகம் நடைபெறுகின்றது என்பதை தன்னால் அறிய முடியவில்லை எனவும் கூறினார்.

இதன்போது, கருத்துக் கூறிய தவிசாளர் த.நடனேந்திரன், இலங்கைக் கடற்படைக்கு இதுவரை செலுத்தப்பட்ட கட்டணத்தை மீளப்பெறுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஏற்பாடு செய்யப்படும் என செயலாளரும் ஒப்புதலளித்தார்.

இலங்கைக் கடற்படையினருக்கு கடந்த 15 வருடத்தில் செலுத்தப்பட்ட ஏழு இலட்சம் ரூபாவையும் மீளப் பெற்றால், வலி.மேற்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பாதிக்கப்பட்ட, வசதி குறைந்த மக்களுக்கு உதவியளிக்க முடியும் என ஏனைய சில உறுப்பினர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியில் உள்ள வலி.மேற்குப் பிரதேச சபையில் 25 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். அதில் 13 பேர் கூட்டமைப்பு உறுப்பினர்கள்,

ஆறுபேர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, மூன்று பேர் ஐக்கியதேசியக் கட்சி, மேலும் மூன்றுபேர் ஈபிடிபி. ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதிய சபை பதவியேற்றிருந்தது.

வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்தில் 59 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. போர் நடபெற்ற காலத்தில் உள்ளூராட்சி சபைகளுக்குரிய மக்களின் வரிப் பணங்களை இலங்கைப் படையினர் தமது தேவைகளுக்குப் பயன்படுத்தினர் என்பதை தற்போது வில.மேற்குப் பிரதேச சபை வெளிப்படுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தில் உள்ள வளங்கள் மற்றும் வருமானங்களை இலங்கைப் படையினர் பெறுகின்றமை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, தமிழ் உறுப்பினர்கள் ஏன் வெளிப்படுத்துவதில்லை என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன.

கூடுதலான உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை கைப்பற்றியுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, மைத்திரி- ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என மார்தட்டி ஆதரவு கொடுக்கும் நிலையில், இலங்கைப் படையினர் 2009 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்திலும் தமிழர் தாயக வளங்களையும் நிதிகளையும் சுரண்டுகின்றார்கள் என்பது குறித்து ஏன் விளக்கம் கோரவில்லை என்றும் தமிழ் அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்புகின்றன.

இதேவேளை, தமிழர் தாயகத்தில் நுண்கடன் பெற்ற சுமர் 50 இற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நுண்நிதிக் கடன் தமிழ் மக்களை அடிமைப்படுத்தும் செயற்பாடு எனவும் இந்தப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நுண்நிதிக் கடன் வழங்கும் முறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.