கொரோனா வைரஸ் தாக்கத்தை ஒழித்து

பொதுத் தேர்தலை நடத்துவதே நோக்கம்- நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படாது- கோட்டாபய

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை
பதிப்பு: 2020 ஏப். 06 21:59
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 06 22:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#gotabayarajapaksa
முடிந்தவரை கொரேனா வைரஸ் பரவுவதைத் தடுத்து சுமுகமான நிலையை ஏற்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதே பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் அணி உறுப்பினர்களுடன் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலேயே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினால் தற்போது இலங்கையில் உருவாகியுள்ள அவசரகால நிலைமையினால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டிய தேவையில்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டால் மாத்திரமே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும்.
 
ஆனால் அது தவிர்ந்த வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கோட்டாபய ராஜபக்சவுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் கலந்துகொண்டார்.

அரசியல், பொருளாதார நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறுகின்றன.

அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரும் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநித்துவப்படுத்தி அதன் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத்தை மீண்டும் நடத்துமாறு சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையை நிராகரித்த கோட்டாபய ராஜபக்ச, அவசரவாகலச் சட்டத்தை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கோரினார்.

கொரேனா வைரஸ் தாக்கத்தின் பின்னரான சூழலில் இலங்கையில் செயற்படுத்தப்படவுள்ள பல திட்டங்களுக்கு இந்த அவசரகாலச் சட்டம் உதவியாக இருக்கும் என்றும் கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு 113 சாதாரண பொரும்பான்மை இலங்கை நாடாளுமன்றத்தில் இல்லை. இதனால் எதிர்க்கட்சிகளின் ஆதரவின்றி அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.