இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத் தேர்தல் இழுபறி-

மே மாதம் 2 ஆம் திகதி கூட்டம்- அதன் பின்னரே யூன் 20 இல் தேர்தல் நடத்துவது குறித்த தீர்மானம்

தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்கவும் தடை- மகிந்த தேசப்பிரிய விளக்கம்
பதிப்பு: 2020 ஏப். 21 16:26
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஏப். 21 23:17
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#lka
#slparliament
#election
யூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் என அறிவிக்கப்பட்டாலும் மே மாதம் இரண்டாம் திகதி சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படுமென இலங்கை ஒற்றையாட்சி அரசின் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மே மாதம் இரண்டாம் திகதி வரை எவரும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென்றும் அவர் கூறியுள்ளார். கட்சித் தலைவர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ந.காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.
 
யூன் மாதம் இரண்டாம் திகதி தேர்தல் நடத்தப்படுமென நேற்றுத் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டிருந்த இலங்கை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று நடத்திய கூட்டத்தில் யூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது பற்றி மகிந்த தேசப்பிரிய விளக்கமளித்தார். மே மாதம் இரண்டாம் திகதி சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட பிரதிநதிகளுடன் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார நிலைமைகள் குறித்துக் கேட்டறிந்து அதன் பின்னரே தேர்தலை நடத்துவது தொடர்பான முடிவு எடுக்கப்படுமென மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத்துறையினர் கூறினால், தேர்தல் யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்தப்படமாட்டாது என்றும் தேர்தல் மேலும் பிற்போடப்படுமெனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டால் மே மாதம் இரண்டாம் திகதி அன்றே வேட்பாளர்களுக்கான இலக்கங்கள் வழங்கப்படும் எனவும், அன்றில் இருந்து தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பிக்க முடியுமெனவும் அவர் விரிவாகக் கூறியுள்ளார்.

அதேவேளை, மே மாதம் இரண்டாம் திகதி வரை எவரும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென உடனடியாக அறிவிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சட்டத்தரணி; சுமந்திரன், மகிந்த தேசப்பிரியவிடம் கேட்டுக் கொண்டார்.

யூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடக்குமென நினைத்து யாரும் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அது மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான சரியான அறிவிப்பு வரும் வரை தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதென்பதை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அறிவிக்க வேண்டுமெனவும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.