சட்டவிரோத மணல் அகழ்வினால் மட்டக்களப்பு

புணானை கிழக்கு பாரதிபுரம் பிரதேசத்தில் வேளாண்மைச் செய்கைக்கு பாதிப்பு- விவசாய அமைப்புத் தலைவர்

இலங்கைப் பொலிஸார் ஆதரவளிப்பதாகவும் முறைப்பாடு
பதிப்பு: 2018 ஜூலை 13 19:01
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 13 09:06
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில், வேளாண்மை செய்யப்படும் வயல்காணிகளில் இரவு வேளையில் சட்டவிரேதமாக இடம்பெறும் மணல் அகழ்வினால் தமிழ் மக்களின் வாழ்வாதாரத் தொழிலான வேளாண்மைச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைப்புத் தலைவர் சு.கேசவன் தெரிவித்தார். கோறளைப்பற்று வடக்கு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புணானை கிழக்கு பாரதிபுரம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், சுமார் 300 ஏக்கர் காணியில் மழை நீரை நம்பி வேளாண்மை செய்து வருகின்றனர்.
 
இப்பகுதி மண்மேடு என்பதனால், சில குழுக்கள் இலங்கைப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்து அவர்களின் பாதுகாப்புடன் இரவு வேளையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர்.

நீண்டகாலமாக இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வினால் வேளாண்மை செய்யும் நிலங்களில் வளம் பாதிக்கப்படுவதுடன், விளைச்சல் குறைவடைந்துள்ளதாக விவசாய அமைப்புத் தலைவர் சு.கேசவன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இது தொடர்பாக பலதடவைகள் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்த போதிலும் இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனினும், சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு பிரதேச மக்கள் அனைவரும் ஒன்றிணைத்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் கேசவன் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோத மணல் அகழ்விற்கு இலங்கைப் பொலிஸார் ஒத்துழைப்பு வழங்குவதாக மக்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். முறையிடுகின்றனர்.

ஆனால், இலங்கை அரச உயர் அதிகாரிகளும் அந்த முறைப்பாடுகள் குறித்தும் மக்களின் பிரச்சினைகள் பற்றியும் அக்கறைப்படுவதாக இல்லையென பிரதேச மக்கள் கூறுகின்றனர்.